‘அ.ம.மு.க. சார்ஜ் இல்லாத பேட்டரி’ அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு


‘அ.ம.மு.க. சார்ஜ் இல்லாத பேட்டரி’ அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு
x
தினத்தந்தி 21 Nov 2019 11:15 PM GMT (Updated: 21 Nov 2019 2:40 PM GMT)

அ.ம.மு.க. சார்ஜ் இல்லாத பேட்டரியாகி விட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் மீனவர் தின விழாவில் கலந்து கொள்வதற்காக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நாகர்கோவில் வந்தார். அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் அதிகாரிகள், கட்சியினர் வரவேற்றனர்.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கடலோர மற்றும் உள்நாட்டு மீனவர்கள் இருவரும் இரு கண்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே மீன்வளத்துறைக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் மீனவர்கள் சமூகம், கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற பல திட்டங்கள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிய மீன்பிடி தங்கு தளங்கள், மீன்பிடி துறைமுகங்கள் போன்றவை அமைத்துள்ளோம். மேலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளது.

இந்தியாவிலேயே தமிழக மீனவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்குதான் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழக அரசால் மீன்வளத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் அதிகளவு குமரி மாவட்டத்துக்குதான் ஒதுக்கப்படுகிறது.

கடல் பாசி வளர்த்தல் போன்ற மீன் தொழில்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு வங்கி கடன் பெற அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது. 1983-ல் கடல் ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வந்த பின் 8 நாட்டிக்கல் வரை மீனவர்கள் மீன்பிடிக்கலாம். பாரம்பரிய மீனவர்களுக்கு எல்லையே இல்லை.

குமரி மாவட்டத்தில் ஒகி புயலின் போது ஹெலிகாப்டர் தளம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று ஹெலிகாப்டர் தளம் விரைவில் அமைக்கப்படும்.

மீன்வளத்துறையில் கேரளாவை விட தமிழகம் முன்னேற்றத்தில் இருந்து வருகிறது. தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் அதிக அளவில் ஆழ்கடல் செல்பவர்களாக இருக்கிறார்கள். இதற்காக ஜி.பி.எஸ். கருவி கொடுக்கும் திட்டம் உள்ளது. கேரளாவில் ஒகி புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது வரை நிவாரண நிதி வழங்கப்படவில்லை. ஆனால் தமிழக அரசு, குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண நிதியும், வேலை வாய்ப்பும் கொடுத்துள்ளது.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. உள்ளாட்சி தேர்தல் தற்போது வரை நடக்காமல் இருக்க தி.மு.க.தான் காரணம். தமிழகத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணியால் அ.தி.மு.க.வுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.

தமிழகத்தில் அசைக்கமுடியாத மக்கள் சக்தியாக அ.தி.மு.க. உள்ளது. எனவே இனிவரும் காலங்களிலும் அ.தி.மு.க. ஆட்சிதான் என்பது உறுதி. தி.மு.க. பணத்தை நம்பி ஓட்டுகேட்பவர்கள், அ.தி.மு.க மக்களை நம்பி ஓட்டு கேட்பவர்கள். அ.ம.மு.க. கட்சி சார்ஜ் இல்லாத பேட்டரியாகி விட்டது. பஞ்சமி நிலம் குறித்து பேசியது ராமதாஸ். அது விசாரணையில் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

பேட்டியின் போது அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (கிழக்கு), ஜாண் தங்கம் (மேற்கு) மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

Next Story