கபடி போட்டி பார்த்ததால் உடல் சோர்வு: உண்மையை கூறி விடுப்பு எடுத்த மாணவனுக்கு பாராட்டு குவிகிறது


கபடி போட்டி பார்த்ததால் உடல் சோர்வு: உண்மையை கூறி விடுப்பு எடுத்த மாணவனுக்கு பாராட்டு குவிகிறது
x
தினத்தந்தி 21 Nov 2019 11:00 PM GMT (Updated: 21 Nov 2019 4:52 PM GMT)

கொரடாச்சேரி அருகே கபடி போட்டி பார்த்ததால் உடல் சோர்வு என உண்மையை கூறி விடுப்பு எடுத்த பள்ளி மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மாணவன் எழுதிய ‘லீவ் லெட்டர்’ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவாரூர்,

பள்ளி மாணவர்கள் விடுப்பு எடுக்கும்போது சரியான காரணத்தை தெரிவிக்க முடியாவிட்டால் ஒப்புக்காக ஒரு காரணத்தை விடுமுறை கடிதத்தில் எழுதுவது வழக்கம் ஆகும். ‘எனக்கு உடல்நிலை சரியில்லை’, ‘நான் கோவிலுக்கு செல்கிறேன்’ என்பது போன்ற பொதுவான காரணங்களை தெரிவித்து விடுப்பு எடுப்பது வழக்கம்.

சிலர் தாத்தா, பாட்டி இறந்து விட்டதாக பொய் கூறி விடுப்பு எடுப்பதும் உண்டு. ஆனால் கொரடாச்சேரி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் உண்மையான காரணத்தை கூறி விடுப்பு எடுத்துள்ளான். அவனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மாணவன் எழுதிய விடுமுறை கடிதம் (லீவ் லெட்டர்) சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேலராதாநல்லூர் பகுதியை சேர்ந்த மாணவன் தீபக். இவன் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இவருடைய தந்தை விஜயராகவன், ஆட்டோ டிரைவர். இவருடைய தாய் சசிகலா குடும்ப தலைவியாக உள்ளார். தீபக்கிற்கு ஒரு மூத்த சகோதரி உள்ளார். அவரது பெயர் விசாலினி. மன்னார்குடியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவன் தீபக், பள்ளியில் சிறந்த மாணவனாக செயல்பட்டு ஆசிரியர்களிடம் பாராட்டு பெற்று வருகிறான். தற்போது நடந்த காலாண்டு தேர்வில் 90 சதவீத மதிப்பெண் எடுத்துள்ளான். மேலும் பள்ளி பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி இந்த கல்வியாண்டில் இதுவரை 50 புத்தகங்களை தீபக் படித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாணவன் தீபக் கடந்த 18-ந் தேதி பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளான். இதற்காக அந்த மாணவன் தனது வகுப்பு ஆசிரியருக்கு அனுப்பியுள்ள விடுப்பு கடிதத்தில், ‘‘நான் நேற்று ஊரில் நடந்த கபடி போட்டியை பார்த்தேன். இதனால் எனக்கு உடல் சோர்வாக உள்ளது. எனவே எனக்கு ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும்’’ என கூறியுள்ளான்.

இதனையடுத்து அந்த மாணவனுக்கு பள்ளி ஆசிரியரும் விடுப்பு அளித்துள்ளார். மாணவனின் நேர்மையான நடவடிக்கையை பாராட்டிய வகுப்பாசிரியர் மணிமாறன், மாணவனை பாராட்டிடும் வகையில் சமூகவலைதளத்தில் மாணவனின் விடுப்பு கடிதத்தை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாக பரவியது. இந்த பதிவை ஏராளமானோர் பார்த்து, மாணவனின் நேர்மையை பாராட்டி வருகிறார்கள்.

பொய் சொல்லக்கூடாது என ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை மாணவன் தீபக் கடைபிடிப்பது அனைத்து மாணவர்களுக்கும், ஏன் ஆசிரியர்களுக்கும் கூட ஒரு நல்ல முன்னுதாரணமாக விளங்குவதாக அப்பகுதி மக்களும் பெருமை கொள்கின்றனர். இந்த பாராட்டு அந்த மாணவனின் நேர்மைக்கு கிடைத்த பரிசு என்றே சொல்லலாம்.

Next Story