ஜெயங்கொண்டம் அருகே பரிதாபம்: கார் மீது லாரி ஏறியதில் முதியவர் உள்பட 2 பேர் பலி - டிரைவருக்கு போலீசார் வலைவீச்சு


ஜெயங்கொண்டம் அருகே பரிதாபம்: கார் மீது லாரி ஏறியதில் முதியவர் உள்பட 2 பேர் பலி - டிரைவருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Nov 2019 11:00 PM GMT (Updated: 22 Nov 2019 8:24 PM GMT)

ஜெயங்கொண்டம் அருகே கார் மீது லாரி ஏறியதில், முதியவர் உள்பட 2 பேர் பலியாயினர். தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்,

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள வீரையா நகரை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 80). இவரும், தற்போது கும்பகோணத்தில் வசித்து வரும் பெரம்பலூரை சேர்ந்த பொன்னுசாமி மகன் ராஜராஜன்(35) என்பவரும் நேற்று மாலை விருத்தாசலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை ராஜராஜன் ஓட்டிச்சென்றார். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற டிப்பர் லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

இதில் கார் மீது லாரி ஏறியதில், கார் நசுங்கியது. அதில் இருந்த ராஜராஜனும், சுந்தரமும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெயங்கொண்டம் தமிழரசி, மீன்சுருட்டி மலைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்த சுந்தரம் மற்றும் ராஜராஜனின் உடல்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியாததால் இதுகுறித்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரின் கதவுகளை உடைத்து 2 பேரின் உடல்களையும் வெளியே எடுத்தனர்.

பின்னர் அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story