கும்பகோணம் அருகே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மரக்கிளை முறிந்து விழுந்தது


கும்பகோணம் அருகே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மரக்கிளை முறிந்து விழுந்தது
x
தினத்தந்தி 24 Nov 2019 4:30 AM IST (Updated: 24 Nov 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மரக்கிளை முறிந்து விழுந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மழை பெய்தபோது பலத்த காற்றும் வீசியது. இதனால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்தன.

இந்த நிலையில் சென்னை தாம்பரம்-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கன்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது.

பயணிகள் அதிர்ச்சி

இதன் காரணமாக தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த மரத்தின் கிளை திடீரென முறிந்து அந்த வழியாக வந்து கொண்டிருந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் மீது விழுந்தது. அப்போது பலத்த சத்தம் கேட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டனர்.

இதையடுத்து என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். மரக்கிளை முறிந்து விழுந்ததில் என்ஜின் பக்கவாட்டில் இருந்த ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. சிறிது நேரத்துக்கு பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. தஞ்சாவூருக்கு ரெயில் வந்ததும் ரெயிலில் வேறு என்ஜின் பொருத்தப்பட்டது. ஓடிக்கொண்டிருந்த ரெயில் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story