சகோதரியின் மகள் திருமண விழாவில் கலந்துகொள்ள பேரறிவாளன் கிரு‌‌ஷ்ணகிரி வந்தார் பலத்த போலீஸ் பாதுகாப்பு


சகோதரியின் மகள் திருமண விழாவில் கலந்துகொள்ள பேரறிவாளன் கிரு‌‌ஷ்ணகிரி வந்தார் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 24 Nov 2019 4:00 AM IST (Updated: 24 Nov 2019 3:23 AM IST)
t-max-icont-min-icon

சகோதரியின் மகள் திருமண விழாவில் கலந்துகொள்ள பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிரு‌‌ஷ்ணகிரிக்கு நேற்று வந்தார்.

கிரு‌‌ஷ்ணகிரி,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் தனது தந்தையை உடன் இருந்து கவனித்து கொள்வதற்காக கடந்த 12-ந் தேதி ஒரு மாதம் பரோலில் வந்தார். அவர் ஜோலார்பேட்டையில் தனது குடும்பத்துடன் தங்கி உள்ளார்.

இந்த நிலையில் பேரறிவாளனின் சகோதரி அன்புமணியின் மகள் செவ்வை - கவுதமன் திருமணம் கிரு‌‌ஷ்ணகிரியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பேரறிவாளன் நேற்று மாலை கிரு‌‌ஷ்ணகிரிக்கு வந்தார்.

சீமான், சத்யராஜ்

திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்து வந்தனர். அங்கு மணமக்களை பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாள் மற்றும் குடும்பத்தினர் வாழ்த்தினார்கள்.

இதே போல நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் இயக்குனர் கவுதமன், இயக்குனர்கள் அமீர், ‘‘மூடர்கூடம்’’ நவீன், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன் உள்பட ஏராளமானவர்கள் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசுக்கு நன்றி

இது எங்கள் குடும்ப விழா. இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திருமண விழாவில் பேரறிவாளன் பங்கேற்க பரோல் கிடைக்க உதவிய தமிழக அரசுக்கும், தமிழக முதல்-அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பேரறிவாளன் அவரது சகோதரியின் திருமண விழாவில் பங்கேற்க முடியாமல் போனது.

தற்போது அவரது சகோதரியின் மகள் திருமண விழாவில் பங்கேற்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story