சாலை அகலப்படுத்தும் பணிக்காக வெட்டப்பட்ட புளியமரத்திற்கு அஞ்சலி செலுத்திய இளைஞர்கள்


சாலை அகலப்படுத்தும் பணிக்காக வெட்டப்பட்ட புளியமரத்திற்கு அஞ்சலி செலுத்திய இளைஞர்கள்
x
தினத்தந்தி 25 Nov 2019 11:00 PM GMT (Updated: 25 Nov 2019 8:06 PM GMT)

சாலை அகலப்படுத்தும் பணிக்காக வெட்டப்பட்ட புளியமரத்திற்கு அஞ்சலி செலுத்திய இளைஞர்கள்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் உள்ளது அன்னவாசல். இந்த பகுதியை சுற்றி சித்தன்னவாசல், குடுமியான்மலை, நார்த்தாமலை உள்பட புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் உள்ளது. இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டும் எனில் அன்னவாசல் வழியாக தான் செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி அன்னவாசலில் போலீஸ் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மின்சார வாரிய அலுவலகங்கள் உள்ளன. நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலை வசதிகள் மிக குறுகியதாகவும், சாலைகள் மிக மோசமாகவும் இருந்தது.

இதுகுறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிட்ட பின்பு சித்தன்னவாசலில் இருந்து பள்ளிவாசல் பஸ் நிறுத்தம்வரை ஒரு பகுதியை தவிர புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது. அதனை தொடர்ந்து ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் இருந்து பஸ் நிலையம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கியது. அன்னவாசல் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வரை சாலையோரத்தில் 10-க்கும் மேற்பட்ட புளியமரங்கள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலையோரங்களிலும் பஸ் நிறுத்த பகுதி, பொதுமக்கள் நிழலுக்காக அமரும்பகுதி உள்ளிட்ட இடங்களில் இருந்த 5-க்கும் மேற்பட்ட புளியமரங்கள் சாலை அகலப்படுத்தும் பணிக்காக வெட்டி அகற்றப்பட்டன. இதனையடுத்து அன்னவாசல் இளைஞர்கள் ஒன்றிணைந்து வெட்டப்பட்ட புளியமரத்தின் அடிப்பகுதியில் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், இத்தனை வருடமாக இந்த பகுதி மக்களுக்கு நிழற்குடையாக திகழ்ந்த மரத்தை அழித்து விட்டனரே என வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story