மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதி


மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 30 Nov 2019 11:00 PM GMT (Updated: 30 Nov 2019 3:42 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, திருமயம், அரிமளம், அறந்தாங்கி, இலுப்பூர், அன்னவாசல், கீரனூர், விராலிமலை, பொன்னமராவதி, மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

குறிப்பாக புதுக்கோட்டை நகரில் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. நேற்று காலையில் சுமார் 10 மணி வரை நகர் பகுதிகளில் மழை பெய்தது. இதனால் புதுக்கோட்டை, ராஜகோபால புரம், பெரியார் நகர், கம்பன்நகர், கூடல்நகர், பழனியப்பா முக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள சில வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

மழைநீர் புகுந்தது

இதேபோல புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள பல்லவன் குளம் நிறைந்தது. இதனால் குளத்தின் அருகே உள்ள சாந்தநாதசுவாமி கோவில், பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இதனால் சாந்தநாதசுவாமி கோவில் நடை சாத்தப்பட்டது. மேலும் பூ மார்க்கெட் பகுதியில் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். இதேபோல கல்யாணராமபுரம், திருக்கோகர்ணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்கள் நிறைந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதேபோல வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட விளையாட்டு மைதானம், வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் மழைநீர் புகுந்தது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இதனால் புதுக்கோட்டை நகரில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் கழிவுநீர் கால்வாய், வரத்துவாரிகளில் உள்ள அடைப்புகளை சரிசெய்தனர். மேலும் மழைநீர் புகுந்த இடங்களுக்கு சென்று, மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அதிக அளவில் சாலைகளில் ஓடிய மழைநீரை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர். இதனால் நேற்று மதியத்திற்கு பிறகு குடியிருப்பு பகுதிகளில் உள்ள மழைநீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிய தொடங்கியது.

காவலாளி பலி

புதுக்கோட்டை மச்சுவாடி அருகே உள்ள வெங்கடேஸ்வராநகர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 56). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வரும் இவர், நேற்று பழனியப்பாநகர் பகுதியில் உள்ள டீக்கடை டீ குடிப்பதற்காக மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு வந்ததால், மயங்கி சாலையில் சென்று கொண்டிருந்த மழைநீருக்குள் விழுந்தார்.

இதைக்கண்ட அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் உடனடியாக கந்தசாமியை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கந்தசாமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மழையளவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் ஆதனக்கோட்டை 48, பெருங்களூர் 48.80, புதுக்கோட்டை 130.20, ஆலங்குடி 30.20, கந்தர்வகோட்டை 35, கறம்பக்குடி 28.60, மழையூர் 63.60, கீழாநிலை 38.40, திருமயம் 31, அரிமளம் 26.20, அறந்தாங்கி 64, ஆயிங்குடி 47.20, நாகுடி 43.20, மீமிசல் 45.20, ஆவுடையார்கோவில் 30.60, மணமேல்குடி 40, கட்டுமாவடி 25.20, இலுப்பூர் 19, குடுமியான்மலை 24, அன்னவாசல் 70, விராலிமலை 11, உடையாளிப்பட்டி 67.40, கீரனூர் 61.20, பொன்னமராவதி 61.10, காரையூர் 56.60 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 130.20 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக விராலிமலையில் 11 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.

அன்னவாசல்

இதேபோல அன்னவாசல், இலுப்பூர், சித்தன்னவாசல், குடுமியான்மலை, முக்கண்ணாமலைப்பட்டி, பரம்பூர், மலைக்குடிப்பட்டி, வீரப்பட்டி, புதூர், கீழக்குறிச்சி, மெய்வழிச்சாலை, வயலோகம், மாங்குடி, ஆரியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அன்னவாசல் மாதகோவில் தெருவில் முகமது யூசுப் என்பவர் வீட்டில் மழை நீர் புகுந்தது. மேலும் அன்னவாசல் அரசு மருத்துவமனை முதல் பேரூராட்சி அலுவலகம் வரை சாலையில் மழை நீர் தேங்கியதால் அந்த பகுதி முழுவதும் குளம்போல் காட்சி அளித்தது.

இதேபோல முக்கண்ணாமலைப்பட்டியில் தொடர் மழையின் காரணமாக மின் கம்பம் ஒன்று சாய்ந்தது. இது குறித்து தகவல் அறிந்த மின்வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்தனர். இதே போன்று காட்டுப்பட்டியில் உள்ள குளம் ஒன்று தண்ணீர் நிரம்பி உடையும் நிலையில் இருந்தது அதனை அப்பகுதி பொதுமக்கள் இணைந்து அடைத்து உடைப்பை சரி செய்தனர். அன்னவாசல் பகுதியில் உள்ள பக்ருதீன் என்பவர் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் அதிர்‌‌ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

இதேபோல் காரையூர் அடுத்துள்ள எம்.உசிலம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் சிந்தாமணி என்பவர் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

பள்ளிகளுக்கு விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டை நகரில் நேற்று காலையில் இடைவிடாது மழை பெய்து கொண்டிருந்ததால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.

Next Story