வன விலங்குகளை வேட்டையாடிய வழக்கில் போலீஸ்காரர் பணியிடை நீக்கம்


வன விலங்குகளை வேட்டையாடிய வழக்கில் போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 1 Dec 2019 4:00 AM IST (Updated: 30 Nov 2019 11:11 PM IST)
t-max-icont-min-icon

வன விலங்குகளை வேட்டையாடிய வழக்கில் தொடர்புடைய போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உத்தரவிட்டு உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மறைமலை நகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ராபின்சன்(வயது 46). இவர் சம்பவத்தன்று தன்னுடைய காரில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிறைத்துறை பெட்ரோல் விற்பனை நிலைய பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராபின்சன் ஓட்டிவந்த கார் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இது குறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது ராபின்சன் வந்த காரில் ரத்த கறைகள் இருப்பதை கண்ட போலீசார், ரத்த கரைகள் குறித்து ராபின்சனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் ரத்த கறையுடன் 2 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் ராபின்சனை திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் ராபின்சனிடம் இருந்து உரிமம் பெற்ற 3 துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள் மற்றும் அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.

கைது

இதையடுத்து ராபின்சனை போலீசார் கைது செய் தனர். மேலும் ராபின்சன் கொடுத்த தகவலின்படி, புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடி பகுதியை சேர்ந்த ராமன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் ராமச்சந்திரன், புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தின் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியன், திருவப்பூரை சேர்ந்த ராஜே‌‌ஷ், சுரே‌‌ஷ், பாசிப்பட்டியை சேர்ந்த வெங்கடாஜலபதி, கீரனூர் எழில் நகரை சேர்ந்த சாமுவேல் பிரின்ஸ் ஆகியோர் மீது வனவிலங்குகளை வேட்டையாடியதாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராமன், ராஜே‌‌ஷ், வெங்கடாஜலபதி, சாமுவேல் பிரின்ஸ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பணியிடை நீக்கம்

பின்னர் கைது செய்யப்பட்ட ராபின்சன் உள்பட 5 பேரை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியன், போலீஸ்காரர் ராமச்சந்திரன், சுரே‌‌ஷ் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வரும் போலீஸ் காரர் ராமச்சந்திரன் மீது திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் வன விலங்குகளை வேட்டையாடியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், ராமச்சந்திரனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உத்தரவிட்டு உள்ளார்.

4 மான்கள் வேட்டை

இது குறித்து போலீசார் ஒருவர் கூறுகையில், ராபின்சனிடம் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவர் கடந்த 26-ந் தேதி துப்பாக்கிகள் உதவியுடன் சிவகங்கை மாவட்ட பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் 4 மான்களை வேட்டையாடி உள்ளார். பின்னர் அவற்றை காரில் எடுத்துக்கொண்டு புதுக்கோட்டைக்கு வந்து, போலீஸ்காரர் ராமச்சந்திரனிடம் சிறிது மான் கறியை கொடுத்து உள்ளார். பின்னர் ராபின்சன் மான்களை வீட்டிற்கு கொண்டு சென்று, சுரே‌‌ஷ் உதவியுடன் மான்களின் தோல்களை அகற்றி, கறிகளை வெங்கடாஜலபதி, சாமுவேல் பிரின்ஸ், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியன் ஆகியோருக்கும் மான்கறியை கொடுத்து உள்ளார். மேலும் ராபின்சன் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்ட வனப்பகுதிகளுக்கு சென்று, மான், முயல்கள் போன்றவற்றை வேட்டையாடி உள்ளார். பின்னர் அவற்றின் கறியை தனக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், போலீசார் போன்றவர்களுக்கு கொடுத்து உள்ளார்.

மான் தோல்கள் பறிமுதல்

அவர் யார் யாருக்கு மான், முயல்களின் கறிகளை வினியோகம் செய்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ராபின்சனிடம் இருந்து 3 மான்களின் தோல்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஒரு மானின் தோல் யாரிடம் உள்ளது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியன், போலீஸ்காரர் ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்தால் தான், எந்தந்த அரசு அதிகாரிகள், போலீசாருக்கு மான், முயல்களின் கறிகள் வினியோகம் செய்யப்பட்டது போன்ற பல்வேறு தகவல்கள் தெரியவரும். ராபின்சனிடம் உரிமம் பெற்ற 3 துப்பாக்கிகள் உள்ளதால், அவர் எப்படி 3 துப்பாக்கிகளுக்கு உரிமம் பெற்றார். அவர் கள்ள துப்பாக்கிகளை வாங்கி விற்பனை செய்து வந்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

Next Story