வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக கமிஷனர் ஆய்வு


வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக கமிஷனர் ஆய்வு
x
தினத்தந்தி 30 Nov 2019 10:15 PM GMT (Updated: 30 Nov 2019 7:09 PM GMT)

வேலூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம், மல்டி லெவல் கார் பார்க்கிங் உள்பட பல்வேறு திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக கமிஷனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர்,

வேலூர் மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடைகள், சாலைகள், பூங்காக்கள் அமைத்தல், கோட்டையை அழகுப்படுத்தும் பணிகள், மல்டிலெவல் கார் பார்க்கிங், குடிநீர் அபிவிருத்தி பணிகள், மழைநீர் கால்வாய்கள் அமைத்தல், அரசு கட்டிடங்களில் சோலார் தகடுகள் பொருத்தும் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் வேலூர் புதிய பஸ்நிலையம் விரிவாக்கம் செய்யும் பணிகள், ஓட்டேரி ஏரியை பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய சுற்றுலா தலமாக மாற்றுதல் உள்ளிட்ட பணிகளும் விரைவில் நடைபெற உள்ளன. இவற்றை தவிர பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செய்ய வரைவு திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வேலூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை நகராட்சி நிர்வாக கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் அசோகன், தலைமை பொறியாளர் நாகராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்கள் முதற்கட்டமாக சத்துவாச்சாரி பகுதி 3-ல் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளையும், வேலூர் முத்துமண்டபம் பகுதியில் ரூ.11 கோடியில் கட்டப்பட்டு வரும் மல்டிலெவல் கார் பார்க்கிங் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மல்டிலெவல் கார் பார்க்கிங்கில் எத்தனை இருசக்கர வாகனங்கள், கார்கள் நிறுத்தப்பட உள்ளது என்பது குறித்தும், அப்பணி நிறைவடையும் காலம் குறித்தும் கேட்டறிந்தனர்.

அதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாக அதிகாரிகள் விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள வேலூர் புதிய பஸ்நிலையத்தின் வரைபடத்தை பார்வையிட்டு, மாநகர, புறநகர் பஸ்கள் நிறுத்துமிடம், பயணிகள் ஓய்வறை அமைவிடம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் காட்பாடி காந்திநகரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அப்போது குடிநீர் அபிவிருத்தி திட்டத்தில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைப்பது உள்பட அனைத்து பணிகளையும் உரிய காலத்தில் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு நகராட்சி நிர்வாக கமிஷனர் பாஸ்கரன் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் கோட்டை அகழி தூர்வாரும் பணிகள், ஓட்டேரி ஏரி ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின் போது வேலூர் மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர்கள் கண்ணன், சீனிவாசன் (ஸ்மார்ட் சிட்டி), நகர்நல அலுவலர் மணிவண்ணன், உதவி கமிஷனர்கள் மதிவானன், செந்தில்குமார், பிரபு, கட்டிட ஆய்வாளர் சீனிவாசன், சுகாதார அலுவலர்கள் சிவக்குமார், முருகன், பாலமுருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story