முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் 1,846 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் 1,846 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 30 Nov 2019 11:00 PM GMT (Updated: 30 Nov 2019 8:40 PM GMT)

கெரகோடஅள்ளியில் நடந்த விழாவில் முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் 1,846 பயனாளிகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

காரிமங்கலம்,

காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி, அரசு பள்ளி எல்.கே.ஜி., யூ.கே.ஜி. குழந்தைகளுக்கு சீருடை, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி, அம்மா இருசக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் குமார் வரவேற்று பேசினார்.

விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் மொத்தம் 1,846 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர்கள் கவிதா, சசிகுமார், கூட்டுறவு வங்கி தலைவர்கள் செந்தில்குமார், சம்பத், சந்திரன், காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நடவடிக்கை

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் எண்ணற்ற பல திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் 50 ஆயிரத்து 712 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு முறையாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் முதல்கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் 3,925 பயனாளிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 4,504 பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது. இந்த நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Next Story