வில்லியனூர், கோரிமேடு போலீஸ் நிலையங்களில் கவர்னர் கிரண்பெடி திடீர் ஆய்வு


வில்லியனூர், கோரிமேடு போலீஸ் நிலையங்களில் கவர்னர் கிரண்பெடி திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 30 Nov 2019 11:00 PM GMT (Updated: 30 Nov 2019 10:14 PM GMT)

வில்லியனூர், கோரிமேடு போலீஸ் நிலையங்களில் கவர்னர் கிரண்பெடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி வார இறுதிநாட்களில் துப்புரவு பணிகள், நீர்நிலைகளை ஆய்வு செய்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று அவர் போலீஸ் நிலையங்களில் திடீர் ஆய்வு செய்ய திட்டமிட்டு இருந்தார்.

இந்த ஆய்வுக்கு வருமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் எந்த போலீஸ் நிலையத்திற்கு செல்கிறோம் என்பதை முன்கூட்டி தெரிவிக்க மறுத்துவிட்டார். இதனால் நேற்று அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு இருந்தன.

வில்லியனூர்

இந்தநிலையில் நேற்று காலை வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். கவர்னருடன் போலீஸ் ஐ.ஜி. சுரேந்தர்சிங் யாதவ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

போலீஸ் நிலையத்தின் ஒவ்வொரு பகுதியாக சென்று அவர் ஆய்வு செய்தார். அப்போது குற்ற பதிவேடுகள், நீதிமன்ற வழக்குகள் குறித்த ஆவணங்களை பார்வையிட்டார். அங்கிருந்த போலீசாரிடம் போலீஸ் நிலையத்தை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தினார்.

பெண் போலீசார்

அதேபோல் பீட் ஆபீசர்கள் அந்த பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை அறிந்திருக்கவேண்டும், பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆண் போலீசாருக்கு இணையாக பெண் போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து கோரிமேடு போலீஸ் நிலையத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அங்கும் போலீசாருக்கு ரோந்துப்பணிகள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார்.

Next Story