வருமானவரித்துறை சோதனை: தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - சாவில் சந்தேகம் உறவினர்கள் போலீசில் புகார்


வருமானவரித்துறை சோதனை: தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - சாவில் சந்தேகம் உறவினர்கள் போலீசில் புகார்
x
தினத்தந்தி 1 Dec 2019 11:30 PM GMT (Updated: 1 Dec 2019 9:32 PM GMT)

வருமானவரித்துறை சோதனைக்கு உட்படுத் தப்பட்ட தனியார் நிறுவனத்தின், ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை,

சென்னை வடபழனி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). இவர் அடையாறு காந்திநகர் கால்வாய்க்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் இறால் மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

செந்தில்குமார் வேலை பார்க்கும் நிறுவனத்தில் கடந்த 3 நாட்களாக வருமானவரி துறையினர் சோதனை செய்து வந்தனர். இதனால் அவர் 2 நாட்களாக வீட்டிற்கு செல்லாமல், நிறுவனத்திலேயே இருந்துள்ளார்.

இந்தநிலையில் செந்தில்குமார் நேற்று முன்தினம் இரவு அந்த நிறுவனத்தின் 3-வது மாடியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட உடன் பணியாற்றும் ஊழியர்கள், செந்தில்குமாரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், செந்தில்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனைக்கு வந்தனர். செந்தில்குமார்தான் வேலை செய்யும் நிறுவனத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்களிடம் சக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து செந்தில்குமாரின் உறவினர்கள், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

செந்தில்குமார் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வருமான வரிசோதனை நடந்த போது, அந்த நிறுவனத்தில் சில ‘ஹார்டு டிஸ்க்’ குகளை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.

அவர்கள் கைப்பற்றியதில் ஒரு ‘ஹார்டு டிஸ்க்’ செந்தில்குமாருக்கு சம்பந்தப்பட்டதாகும். அதில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததாகவும், அதனால் அவர் தனக்கு ஏதேனும் பிரச்சினை வந்துவிடுமோ என பயந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இதை அவரது உறவினர்கள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.

Next Story