தீபாவளி பரிசு சீட்டு நடத்தி பணம் மோசடி செய்தவர் தப்பி ஓட்டம்: பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு


தீபாவளி பரிசு சீட்டு நடத்தி பணம் மோசடி செய்தவர் தப்பி ஓட்டம்: பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Dec 2019 4:00 AM IST (Updated: 2 Dec 2019 10:35 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பரிசு சீட்டு நடத்தி பணம் மோசடி செய்தவர் தப்பி ஓடியதால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கோபுர வீதியில் முரளிகிரு‌‌ஷ்ணன் (வயது48) என்பவர் கடந்த 10 வருடங்களாக நகைக்கடை நடத்தி வந்தார். அதோடு இவர் தீபாவளி பரிசு சீட்டும் நடத்தி வந்தார். இதில் மாதந் தோறும் ரூ.1300 மற்றும் ரூ.1500 வீதம் 11 மாதங்களுக்கு பணம் கட்டினால் தீபாவளிக்கு 5 கிராம் தங்க நாணயம் தருவதாக கூறினார்.

இதனால் திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏஜெண்டு போல் முன் நின்று ஒவ்வொருவரும் 50 முதல் 150 பேரை பரிசு திட்டத்தில் சேர்த்து அவர்களிடமிருந்து மாதந்தோறும் பணம் வசூல் செய்து நகைக்கடையில் செலுத்தி வந்தனர்.

அந்த வகையில் கடந்த தீபாவளி பரிசு திட்டத்தில் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் பணம் வசூலானதாக கூறப்படுகிறது. ஆனால் நகைக்கடை உரிமையாளர் முரளி கிருஷ்ணன், தீபாவளி முடிந்து இரண்டு மாதங்கள் ஆகியும், பணம் செலுத்தியவர்களுக்கு 5 கிராம் தங்க நாணயம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்த நிலையில் அவர் கடந்த வாரம் தனது பெயரில் இருந்த வீடு, சொத்துக்கள், கடைகள் அனைத்தையும் உறவினர் பெயரில் எழுதிவைத்து விட்டு நகை கடையை பூட்டி விட்டு குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

இதனால் தீபாவளி சீட்டு பணம் கட்டி ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றனர். ஆனால் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கலெக்டரிடம் மனு கொடுக்க முடியவில்லை. இதனால் அருகிலுள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் மனு கொடுத்தனர். புகாரை பெற்றுக் கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் கள்ளக்குறிச்சியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story