மாவட்ட செய்திகள்

4 ஆண்டுகளுக்கு பிறகு வீடுர் அணை திறப்பு: செட்டிப்பட்டு படுகை அணை முதல் முறையாக நிரம்பியது + "||" + After 4 years Veer Dam is opened: The Chettipattu Basin Dam was filled for the first time

4 ஆண்டுகளுக்கு பிறகு வீடுர் அணை திறப்பு: செட்டிப்பட்டு படுகை அணை முதல் முறையாக நிரம்பியது

4 ஆண்டுகளுக்கு பிறகு வீடுர் அணை திறப்பு: செட்டிப்பட்டு படுகை அணை முதல் முறையாக நிரம்பியது
4 ஆண்டுகளுக்கு பிறகு வீடுர் அணை திறக்கப்பட்டதால் ஊசுட்டேரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் புதிதாக கட்டப்பட்ட செட்டிப்பட்டு படுகை அணை முதல் முறையாக நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருக்கனூர்,

புதுச்சேரி மாநிலத்தின் முக்கிய நீராதாரமாக சங்கராபரணி ஆறு திகழ்கிறது. செஞ்சி மலையில் உற்பத்தியாகி வரும் இந்த ஆறு மயிலம், இளையாண்டிப்பட்டு, ஐவேலி வழியாக புதுச்சேரி மாநிலம் கூனிச்சம்பட்டுக்குள் நுழைகிறது. இங்கிருந்து செட்டிப்பட்டு, குமராபாளையம், சுத்துக்கேணி, செல்லிப்பட்டு, வில்லியனூர், அரியாங்குப்பம் வழியாக நோணாங்குப்பத்திற்கு சென்று கடலில் கலக்கிறது.

இந்த ஆற்றில் கூனிச்சம்பட்டில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. அதையடுத்து சுத்துக்கேணி மற்றும் செல்லிப்பட்டில் ஆகிய பகுதிகளில் தடுப்பணை கட்டப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாய தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே நீராதாரத்தை பெருக்கும் வகையில் சுத்துக்கேணி தடுப்பணைக்கு அடுத்து புதிதாக செட்டிப்பட்டில் ஒரு தடுப்பணையும் கட்டப்பட்டது.

இருந்தபோதிலும் விழுப்புரம் மாவட்டம் வீடுரில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பெரிய அணை கட்டப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த அணை மூலம் தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 200 ஏக்கர் நிலப்பரப்பும், புதுச்சேரி மாநிலத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பும் பாசன வசதி பெறுகிறது.

கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக வீடுர் அணை நிரம்பும் தருவாயில் இருந்தது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக நேற்று வீடுர் அணை நிரம்பியது.

அதைத் தொடர்ந்து வீடுர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. அணையில் இருந்து 2000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 2015-ம் ஆண்டுக்கு பின்னர் சுமார் 4 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் இந்த அணை நிரம்பி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அந்த தண்ணீர் சங்கராபரணி ஆற்றில் கரைபுரண்டு வருகிறது. அதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

அணை திறந்து விடப்பட்டதன் காரணமாக கூனிச்சம்பட்டு தடுப்பணை முழுவதும் நிரம்பியது.

அங்கிருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியே புதிதாக கட்டப்பட்ட செட்டிப்பட்டு தடுப்பணைக்கு வந்தது. அதனால் அந்த தடுப்பணையும் தற்போது நிரம்பி மறுகால் பாய்கிறது. முதல் முறையாக செட்டிப்பட்டு தடுப்பணை நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் அந்த பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தடுப்பணை நிரம்பி வழிவதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் சென்று வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் வரத்து உள்ளதால் சுத்துக்கேணி பகுதியில் உள்ள தடுப்பணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்த தடுப்பணை நிரம்பியதும் வாய்க்கால் வழியாக திருக்கனூர் அருகே உள்ள ஊசுட்டேரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும். ஏற்கனவே பெய்துள்ள மழையால் ஊசுட்டேரியில் தண்ணீர் ஓரளவு நிரம்பி உள்ளது. இந்த நிலையில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் ஊசுட்டேரி விரைவில் நிரம்பும் என்று விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.