தொடர் மழை எதிரொலி: வேடியூர், நல்லகுட்லஅள்ளி ஏரிகள் நிரம்பின பூஜை செய்து பொதுமக்கள் வழிபாடு


தொடர் மழை எதிரொலி: வேடியூர், நல்லகுட்லஅள்ளி ஏரிகள் நிரம்பின பூஜை செய்து பொதுமக்கள் வழிபாடு
x
தினத்தந்தி 3 Dec 2019 11:00 PM GMT (Updated: 3 Dec 2019 8:46 PM GMT)

தொடர் மழை எதிரொலியால் கடத்தூர் அருகே வேடியூர், நல்லகுட்லஅள்ளி ஏரிகள் நிரம்பியதை தொடர்ந்து பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

கடத்தூர்,

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் மூக்கனூர் மற்றும் வத்தல்மலை பகுதியில் உள்ளது. இந்த மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் பொதியம் பள்ளம் அணைக்கட்டு பகுதியில் சேர்கிறது. அங்கிருந்து கால்வாய்கள் மூலம் சுமார் 15 கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. அதன்படி நல்லகுட்ல அள்ளி ஏரி, கடத்தூர் ஏரி, வேடியூர் ஏரி, போசிநாயக்கனள்ளி ஏரி, புதுப்பட்டி ஏரி, தாஸ் நகர் ஏரி, சிந்தல்பாடி ஏரி உள்ளிட்ட 15 ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே போதிய மழை இல்லாததால் இந்த ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருந்தது. இதனால் ஏரிகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

பொதுமக்கள் வழிபாடு

இந்தநிலையில் தற்போது மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. வத்தல்மலை பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் பொதியம் பள்ளம் அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நல்லகுட்ல அள்ளி ஏரி முழுமையாக நிரம்பியது. இதையொட்டி கிராம மக்கள் ஒன்றுகூடி பூஜை செய்து கிடா வெட்டி வழிபட்டனர்.

இதைத் தொடர்ந்து வேடியூர் ஏரியும் நேற்று முழுமையாக நிரம்பியது. அங்கும் ஊர்கவுண்டர் வடிவேல், மாவட்ட பா.ஜனதா பொதுச் செயலாளர் சிவன், மந்திரி கவுண்டர் கேசவன் மற்றும் ஊர் பொதுமக்கள் அந்த ஏரியில் கிடா வெட்டி, மலர் தூவி பூஜை செய்து வழிபாடு செய்தனர். தொடர் மழை காரணமாக கிணறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story