பெங்களூரு மண்டல ரெயில்வேயில் பணி செய்து: விளையாட்டு போட்டிகளில் சாதித்த 25 ஊழியர்களுக்கு பாராட்டு


பெங்களூரு மண்டல ரெயில்வேயில் பணி செய்து: விளையாட்டு போட்டிகளில் சாதித்த 25 ஊழியர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 3 Dec 2019 11:24 PM GMT (Updated: 3 Dec 2019 11:24 PM GMT)

பெங்களூரு மண்டல ரெயில்வேயில் பணி செய்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வென்று பதக்கம் பெற்ற 25 ஊழியர்களுக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

பெங்களூரு,

தென்மேற்கு கோட்ட ரெயில்வேயில் 3 மண்டலங்கள் உள்ளன. இதில் பெங்களூரு மண்டலம் ஒன்றாகும். பெங்களூரு மண்டல ரெயில்வே மேலாளராக அசோக் குமார் வர்மா பணியாற்றி வருகிறார். பெங்களூரு மண்டல ரெயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் வேலைக்கு சேர்ந்து பணி செய்யும் ஊழியர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

அதன்படி விஸ்வாம்பர் கோலிகார்(தடகளம்), ஜெகதீஷ் சந்திரா(தடகளம்), பினீஷ்(உயரம் தாண்டுதல்), உமா(குண்டு எறிதல்), கார்த்திக்(டிரிப்பிள் ஜம்ப்), அனிலா ஜோஸ்(தொடர் ஓட்டம்), பிரியங்கா(கலந்துரையாடல்), பர்வீந்தர் குமார்(ஈட்டி எறிதல்), சுரேந்தர் சிங் (டிகத்லான்), சுரன்(டிகத்லான்), சந்தீஷ் (உயரம் தாண்டுதல்), தீபக்(20 கிலோ மீட்டர் நடத்தல்), பர்வேஸ்(கிராஸ் கன்ட்ரி), மரியா ஜாய்சன்(உயரம் தாண்டுதல்), புஷ்பாஞ்சலி(தடை தாண்டிய ஓட்டம் 100 மீட்டர்), லோகநாயகி(தொடர் ஓட்டம்) ஆகியோர் பதக்கங்கள் பெற்றனர். மேலும் லோகித், ஹேமந்த், சோனி எலியாஸ், மணி ஆகியோர் நீச்சல் சம்பந்தப்பட்ட போட்டிகளில் பதக்கங்கள் வென்றனர். ஆணழகன் போட்டியில் பிரிதம் சவுக்லினும், துப்பாக்கி சுடுதலில் மேக்னா சஜானர் என்பவரும் பதக்கங்கள் பெற்றனர்.

இந்த நிலையில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெற்ற 22 ஊழியர்கள், பயிற்சியாளர்களான ஈசன் சிவானந்த் நாகராஜ்(தடகளம்), தாமஸ் சாவரா(நீச்சல்), போனா தாமஸ்(டேபிள் டென்னிஸ்) என்று மொத்தம் 25 பேருக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது. பெங்களூரு மண்டல அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் பெங்களூரு மண்டல ரெயில்வே மேலாளர் அசோக் குமார் வர்மா கலந்து கொண்டு ஊழியர்களாக உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி பரிசுகள் வழங்கினார்.

அதன்பிறகு அசோக் குமார் வர்மா பேசுகையில், ‘இந்தியன் ரெயில்வே, விளையாட்டு வீரர்களுக்கு மதிப்பளித்து வருகிறது. வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கிறது. பணிகளில் சேர்ந்த பிறகும் அவர்கள் தாங்கள் சார்ந்த விளையாட்டுகள் மூலம் தேசிய, சர்வதேச அளவில் பங்கெடுத்துக் கொள்ள ரெயில்வே நிர்வாகம் அனுமதிக்கிறது. அத்துடன் பதக்கம் வெல்பவர்களுக்கு பதவி உயர்வு, கூடுதல் சம்பள உயர்வு, ஊக்கத்தொகை ஆகியவையும் வழங்கப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட விளையாட்டுகள் தொடர்பாக பயிற்சி பெறவும் சிறப்பு விடுமுறைகள் அளிக்கப்படுகிறது. இதனால் விளையாட்டு துறைகளில் ஆர்வமாக உள்ள ஊழியர்கள் தங்களை திறம்பட தயார் செய்து கொண்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற வேண்டும்‘ என்றார்.

இந்த விழாவில் தென்மேற்கு ரெயில்வேயின் பெங்களூரு விளையாட்டு சங்க செயலாளர் ஆசீப் ஹபிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story