கோவில்பட்டியில் பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்த மாணவியை எரித்துக்கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு


கோவில்பட்டியில் பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்த மாணவியை எரித்துக்கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 5 Dec 2019 12:15 AM GMT (Updated: 4 Dec 2019 8:07 PM GMT)

கோவில்பட்டியில் பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்த மாணவியை எரித்துக்கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்தவர் கோபால், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேசுவரி (வயது 35). இவர்களுடைய மகள் மாரிசெல்வி (13). இவள் கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு அரசு உண்டு உறைவிட பள்ளியில் விடுதியில் தங்கி இருந்து 7-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த 11-6-12 அன்று விடுதியில் இருந்து மாரிசெல்வி வெளியேறி வீட்டுக்கு வந்து விட்டாள் இதனால் அவளை தாய் ராஜேசுவரி சத்தம் போட்டு உள்ளார். மறுநாள் மாரிசெல்வியை பள்ளிக்கூடத்துக்கு செல்லுமாறு ராஜேசுவரி கூறினார். ஆனால், மாரிசெல்வி பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்து விட்டாள்.

இதில் ஆத்திரம் அடைந்த ராஜேசுவரி வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து மாரிசெல்வி மீது ஊற்றி தீவைத்து விட்டார். இதில் உடல் கருகிய மாரிச்செல்வியை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 1-10-2012 அன்று அவள் பரிதாபமாக இறந்தாள்.

இந்த கொடூரக்கொலை குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசுவரியை கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சி.குமார் சரவணன் குற்றம் சாட்டப்பட்ட ராஜேசுவரிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீலாக வி.சுபா‌ஷினி ஆஜரானார்.

Next Story