திருப்பத்தூரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் - டி.ஐ.ஜி. திறந்து வைத்தார்


திருப்பத்தூரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் - டி.ஐ.ஜி. திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 5 Dec 2019 10:30 PM GMT (Updated: 2019-12-06T01:28:12+05:30)

திருப்பத்தூரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை வேலூர் சரக டி.ஐ.ஜி. ஜெ.காமினி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் புதுப்பேட்டை ரோட்டில் உள்ள வணிகவரி ஆணையாளர் அலுவலகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஜெ.காமினி கலந்துகொண்டு, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் என்.விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தங்கவேல், பாலகிரு‌‌ஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். அதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நிருபர்களிடம் கூறுகையில், இன்று (அதாவது நேற்று) திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அலுவலகத்திற்கு தேவையான அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். பொதுமக்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் என்னை அணுகலாம்’ என்றார்.

நிகழ்ச்சியில் போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து திருப்பத்தூரை அடுத்த பார்சல் கிராமத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட ஆயுதப்படை பிரிவை, டி.ஐ.ஜி. ஜெ.காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி வைத்து திறந்து வைத்தனர்.

Next Story