ஆண்டிமடம் அருகே கிணறு உள்வாங்கியதால் பரபரப்பு


ஆண்டிமடம் அருகே கிணறு உள்வாங்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Dec 2019 10:30 PM GMT (Updated: 5 Dec 2019 8:12 PM GMT)

ஆண்டிமடம் அருகே கிணறு உள்வாங்கியதால் பரபரப்பு.

வரதராஜன்பேட்டை,

ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை ஊராட்சியில் புது தேவாங்கர் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த மாதம் புதிதாக வீடு கட்டியிருந்தார். இந்த வீட்டின் பின்புறம் பழைய வீடு இருக்கும்போது, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிணறு ஒன்று இருந்தது. இதன் மூலம் கிணற்றில் மின் மோட்டார் வைத்து வீட்டுக்கு மேல் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை சேமித்து வைத்து வீட்டிற்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் வீட்டின் பின்புறம் கட்டிடம் இடிந்து விழுவது போன்ற சத்தம் கேட்டது. உடனே சங்கர் வெளிேய சென்று பார்த்தபோது, கிணறு அப்படியே 10 அடி ஆழத்திற்கு உள்வாங்கியிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் கிணற்றை சுற்றி வைத்திருந்த தண்ணீர் இறைக்கும் பாத்திரங்களும் உள்ளே விழுந்து விட்டன. பின்னர் வீட்டிலுள்ள அனைவரும் கிணற்றுக்கு அருகில் செல்லாமல், உடனே ஆண்டிமடம் தாசில்தார் குமரையாவிடம் தகவல் தெரிவித்தனர். மேலும் இதேபோல் இவரது வீட்டின் அருகில் வசிக்கும் இளங்கோவன் என்பவரது வீட்டிலும் இதுபோன்று சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிணறு இடிந்து உள்ளே விழுந்து விட்டது. இது குறித்தும் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தாசில்தார் குமரையா மற்றும் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை, கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள் உள்பட அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் உள்வாங்கிய கிணற்றை மூடுவதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story