ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை


ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 5 Dec 2019 10:30 PM GMT (Updated: 5 Dec 2019 8:33 PM GMT)

ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது. இதையொட்டி அ.தி.மு.க.வினர் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கரூர்,

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கரூர் பஸ் நிலையம் அருகே மனோகரா கார்னர் கோவை சாலையில் ஜெயலலிதாவின் உருவப்படம் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமையில் கட்சியினர், உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் திருவிகா முன்னிலை வகித்தார்.

அரசியல் ஆளுமையை நினைவு கூர்ந்தனர்

பின்னர் ஜெயலலிதாவின் படத்தாளினை கையில் பிடித்தபடியே மவுன அஞ்சலி செலுத்தினர். அப்போது அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்தும், சட்டையில் கருப்பு பட்டை அணிந்தும் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றதை காண முடிந்தது. பெண் நிர்வாகிகள்-தொண்டர்கள் கருப்பு சேலை உடுத்தியிருந்தனர். அப்போது சிலர் ஜெயலலிதாவை நினைத்து கண்ணீர் விட்டு தேம்பி அழுதனர். இந்த நிகழ்ச்சியின் போது தமிழக மக்களுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த நலத்திட்டங்கள், அவரது அரசியல் ஆளுமை, திரைப்பட நடிகையாக இருந்து எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க.வுக்கு தலைமையேற்று வழிநடத்திய திறன், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உரையாடும் புலமை உள்ளிட்டவை பற்றி எண்ணி நிர்வாகிகள் நினைவு கூர்ந்ததை பார்க்க முடிந்தது.

இதில், நகர செயலாளர்கள் நெடுஞ்செழியன், வி.சி.கே.ஜெயராஜ், வெங்கமேடு பாண்டியன், அமைப்புசாரா மற்றும் கட்டுமான பிரிவு மாநில செயலாளர் ராயனூர் சாமிநாதன், மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் கே.சி.பரமசிவம், பாலாஜி பேப்ரிக்ஸ் சண்முகம் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மோட்ச தீபமேற்றி அஞ்சலி

இதே போல், கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கரூர் மனோகரா கார்னரில் நடந்தது. மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் தானே‌‌ஷ் என்கிற முத்துக்குமார் தலைமையில் இளைஞர்கள், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு முன்பு மோட்ச தீபம் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஜெயலலிதா உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதே போல், செங்குந்தபுரம் பழனியப்பா தெருவிலுள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம், திருமாநிலையூர், வெங்கமேடு, தெரசா கார்னர், மண்மங்கலம், வெண்ணைமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு

கிரு‌‌ஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி சார்பில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கரூர் காந்தி கிராமத்தில் உள்ள கிரு‌‌ஷ்ணராயபுரம் சட்டமன்ற அலுவலகம் முன்பு அலங்கரிக் கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு, அ.தி.மு.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவண்ணன் தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து 2 நிமிடம் மவுனம் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஸ்ரீ அன்னை வித்யாலயா பள்ளி சார்பில் தொழிற்பேட்டையில் உள்ள சக்தி மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்களுக்கு பெட்சீட், தலையணை, துண்டு ஆகியவற்றை வழங்கினர். இதை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினர். இதில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story