விலை உயர்வால் திடீர் மவுசு: வெங்காய மூட்டை திருடியவரை கட்டி வைத்து அடி, உதை


விலை உயர்வால் திடீர் மவுசு: வெங்காய மூட்டை திருடியவரை கட்டி வைத்து அடி, உதை
x
தினத்தந்தி 7 Dec 2019 11:00 PM GMT (Updated: 7 Dec 2019 5:44 PM GMT)

விலை உயர்வால் திடீர் மவுசு காரணமாக பெரிய மார்க்கெட்டில் வெங்காய மூட்டை திருடியவரை தொழிலாளர்கள் கட்டி வைத்து அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கிலோ ரூ.200க்கு வெங்காயம் விற்கப்படுகிறது. அதேபோல் சாம்பார் வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளது. புதுச்சேரியிலும் கடந்த 3 நாட்களாக பல்லாரி எனப்படும் வெங்காயம் தரம் பிரித்து ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனையானது. பெரிய வெங்காயம் ரூ.130க்கு விற்பனையானது. சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.180க்கு விற்பனையானது. இதனால் உணவு வகைகளில் வெங்காயம் சேர்ப்பதையே இல்லத்தரசிகள் தவிர்த்து வருகின்றனர். ஓட்டல்களிலும் குறைந்த அளவிலேயே வெங்காயத்தை பயன்படுத்தி வந்தனர்.

இப்படி விலை அதிரடியாக உயர்ந்ததால் மவுசு அதிகரித்ததையொட்டி வெங்காய மூட்டையையே திருடிச் செல்ல முயன்ற சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

லாரிகளில் இறங்கின

புதுச்சேரி நேரு வீதியில் பெரிய மார்க்கெட் உள்ளது. இங்கு காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், பூக்கடைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் ரங்கபிள்ளை வீதியிலும் மொத்த காய்கறி விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புதுவை பெரிய மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக வெங்காய மூட்டைகள் அடிக்கடி திருட்டு போவதாக வியாபாரிகள் தெரிவித்து வந்தனர். பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் வெங்காய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வழக்கம் போல் லாரிகள் வந்தன.அப்போது மார்க்கெட்டில் கடைகள் மூடப்பட்டு இருந்ததால் அந்த கடை களின் முன்பு வெங்காய மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் இறக்கி வைத்து விட்டுச் சென்றனர்.

கட்டி வைத்து அடி, உதை

ரங்கப்பிள்ளை வீதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான மொத்த வியாபார கடைக்கு தேவையான வெங்காய மூட்டைகளும் அங்கு இறக்கி வைக்கப்பட்டன. மற்றொரு கடைக்கு வெங்காய மூட்டைகளை தொழிலாளர்கள் இறக்கி கொண்டு இருந்தபோது காலை 5.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். திடீரென அங்கு இறக்கி வைக்கப்பட்டு இருந்த வெங்காய மூட்டையை திருடிக் கொண்டு செல்ல முயன்றார். இதை பார்த்த சுமை தூக்கும் தொழிலாளர் களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் மேலும் சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து விசாரித்ததில் வெங்காய மூட்டை திருட வந்தவர் என்பது தெரிந்து அந்த ஆசாமியை தொழிலாளர்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

மற்றொரு மூட்டை பறிமுதல்

விசாரணையில் முத்திரையர்பாளையம் காந்தி திருநல்லூரை சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது. முதலில் ஒரு வெங்காய மூட்டையை மார்க்கெட்டில் இருந்து திருடி வீட்டில் வைத்து விட்டு 2-வது மூட்டையை திருட வந்த போது தான் தொழிலாளர்களிடம் கையும் களவுமாக சிக்கினார். இதையடுத்து சக்திவேலை காந்தி திருநல்லூரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு சென்று அங்கு மறைத்து வைத்து இருந்த மற்றொரு வெங்காய மூட்டையை வியாபாரி வேல்முருகன் கைப்பற்றினார். வெங்காயத்தின் விலை உயர்வால் இந்த திருட்டு நடந்து இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. கடும் விலை உயர்வால் ஏற்பட்ட திடீர் மவுசு காரணமாக வெங்காய மூட்டை திருடப்பட்ட சம்பவம் பெரிய மார்க்கெட் வியாபாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story