கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி சுட்டுக்கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை ஓசூர் கோர்ட்டு தீர்ப்பு


கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி சுட்டுக்கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை ஓசூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 9 Dec 2019 11:15 PM GMT (Updated: 9 Dec 2019 6:56 PM GMT)

கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

ஓசூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் ஈரம்மா (வயது 55). இவரும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி பசப்பா (60) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. அவர்கள் 2 பேரும் கணவன் - மனைவி போல வாழ்ந்து வந்தனர்.

அதே போல அப்பகுதியை சேர்ந்த சின்ன திம்மன் (62), மல்லப்பா (70) ஆகியோருக்கும், ஈரம்மாவுடன் பழக்கம் இருந்தது. இந்த நிலையில் சின்னதிம்மன், மல்லப்பா ஆகியோரிடம் பேசிய பசப்பா நாங்கள் 2 பேரும் கணவன் - மனைவி போல வாழ்ந்து வருகிறோம். இதனால் இனி மேல் ஈரம்மாவை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறினார். இது சின்ன திம்மன், மல்லப்பா ஆகியோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பசப்பாவிற்கும், அவர்களுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

சுட்டுக்கொலை

இந்த நிலையில் கடந்த 31.7.2015 அன்று இரவு பசப்பாவின் வீட்டிற்கு சின்ன திம்மன், மல்லப்பா ஆகியோர் நாட்டுத்துப்பாக்கியுடன் வந்தனர். அந்த நேரம் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு பசப்பா எழுந்து வந்து பார்த்தார். அப்போது பசப்பாவை சின்ன திம்மனும், மல்லப்பாவும் சேர்ந்து நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர்.

இந்த கொலை தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ன திம்மனையும், மல்லப்பாவையும் கைது செய்தனர். இவ்வழக்கு ஓசூர் மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி அசோகன் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சின்ன திம்மன், மல்லப்பா ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2,500 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வேலாயுதம் ஆஜர் ஆகி வாதாடினார்.

Next Story