திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதல்நாளில் 63 பேர் வேட்பு மனு தாக்கல்


திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதல்நாளில் 63 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 9 Dec 2019 10:30 PM GMT (Updated: 9 Dec 2019 7:35 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு முதல்நாளில் 63 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 27-ந் தேதி திருப்பூர், ஊத்துக்குளி, காங்கேயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முதல்கட்டமாகவும், 30-ந் தேதி அவினாசி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 2-வது கட்டமாகவும் தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள், 2 ஆயிரத்து 295 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஊரக பகுதியில் மொத்தம் 9 லட்சத்து 95 ஆயிரத்து 765 வாக்காளர்கள் உள்ளனர்.

13 ஊராட்சி ஒன்றியங்களில் 1,704 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 13 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலை நடத்துவதற்கு 28 தேர்தல் நடத்தும் அதிகாரிகள், 363 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பு பிரசுரித்தல் மற்றும் வேட்பு மனுக்கள் நேற்று முதல் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பெறப்பட்டது. திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படுவதற்கான ஏற்பாடுகள் நேற்று செய்யப்பட்டிருந்தன.

இந்த ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று காலை ஆய்வு செய்தார். மாநில தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான தாட்கோ மாவட்ட மேலாளர் இந்திரா, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கனகராஜ், மீனாட்சி, திருப்பூர் வடக்கு தாசில்தார் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதை தொடர்ந்து திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் முதல்நாளான நேற்று ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அவினாசி ஒன்றியத்தில் 11 பேரும், தாராபுரத்தில் ஒருவரும், குடிமங்கலத்தில் 6 பேரும், காங்கேயத்தில் 2 பேரும், குண்டடத்தில் 5 பேரும், மடத்துக்குளத்தில் 5 பேரும், மூலனூரில் 3 பேரும், பல்லடத்தில் 5 பேரும், பொங்கலூரில் 4 பேரும், திருப்பூரில் 3 பேரும், உடுமலையில் 5 பேரும், ஊத்துக்குளியில் 9 பேரும் என மொத்தம் 59 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வெள்ளகோவில் ஒன்றியத்தில் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இதுபோல் ஊராட்சி தலைவர் பதவிக்கு அவினாசி ஒன்றியத்தில் 2 பேரும், பல்லடம் ஒன்றியத்தில் ஒருவரும், உடுமலை ஒன்றியத்தில் ஒருவரும் என மொத்தம் 4 பேர் வேட்பு மனு செய்துள்ளனர். முதல் நாளில் மொத்தம் 63 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

Next Story