கார் டிரைவர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலை செய்து நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலன் கைது


கார் டிரைவர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலை செய்து நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 9 Dec 2019 9:30 PM GMT (Updated: 2019-12-10T01:12:22+05:30)

கார் டிரைவர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அவரை அவருடைய மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலமாகி உள்ளது. மகள் கொடுத்த தகவல் மூலம் போலீசார் துப்பு துலக்கினார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு அரேகெரே அருகே எல்லப்பாரெட்டி லே-அவுட்டை சேர்ந்தவர் பாபு(வயது 36), கார் டிரைவர். இவரது மனைவி லாவண்யா(29). இவருக்கு 11 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 29-ந் தேதி பாபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக லாவண்யா கூறினார். தகவல் அறிந்ததும் தென்கிழக்கு மண்டல போலீசார் விரைந்து வந்து பாபுவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் அவர் தற்கொலை செய்திருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில், பாபுவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் தென்கிழக்கு மண்டல போலீசில் பாபுவின் சகோதரி ஜானகி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதே நேரத்தில் பாபுவின் 11 வயது மகளிடமும் போலீசார் விசாரித்தனர்.

அப்போது தனது தந்தையை ஒரு நபர் பிளாஸ்டிக் வயரால் கழுத்தை இறுக்கியதாகவும், அவருக்கு தேவையான உதவியை தாய் லாவண்யா செய்து கொடுத்ததாகவும் பாபுவின் மகள் கூறினாள். இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பாபு தற்கொலை செய்யவில்லை என்பதையும் போலீசார் உறுதி செய்தனர். அத்துடன் லாவண்யாவுக்கும், சேகர் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும் தெரியவந்தது.

தனது கள்ளக்காதலன் சேகருடன் சேர்ந்து கணவர் பாபுவை லாவண்யாவே தீர்த்து கட்டியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, லாவண்யா, அவரது கள்ளக்காதலன் சேகர் ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story