உள்ளாட்சி தேர்தல்: மாவட்டத்தில் முதல் நாளில் 87 பேர் வேட்புமனு தாக்கல்


உள்ளாட்சி தேர்தல்: மாவட்டத்தில் முதல் நாளில் 87 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 10 Dec 2019 4:30 AM IST (Updated: 10 Dec 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்நாளில் 87 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந் தேதி என 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் அன்னவாசல், விராலிமலை, குன்றாண்டார்கோவில், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு முதல் கட்டமாக வருகிற 27-ந் தேதியும், அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, மணமேல்குடி, திருமயம் மற்றும் திருவரங்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் 2-வது கட்டமாக 30-ந் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. வருகிற 16-ந் தேதி வரை (விடுமுறை நாட்கள் தவிர்த்து) வரையறுக்கப்பட்ட இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். இவ்வாறு பெறப்படும் வேட்பு மனுக்கள் வருகிற 17-ந் தேதி காலை 10 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும்.

87 பேர் வேட்புமனு தாக்கல்

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் 24 பேரும், குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 4 பேரும், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 5 பேரும், விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 18 பேரும், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 13 பேரும், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஒருவரும், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 10 பேரும், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 3 பேரும், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒருவரும் என புதுக்கோட்டை மாவட்டத்தில் 79 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

இதேபோல ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் ஒருவரும், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் ஒருவரும், திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 பேரும், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 3 பேரும், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஒருவரும் என 8 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இருப்பினும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

மேலும் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து வேட்புமனுக்களை வாங்கி சென்றனர். உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலை முன்னிட்டு புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்பட 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த அனைவரையும் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதால், பலரும் உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story