மங்களூர், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில், தனிவார்டாக மாற்றியதை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


மங்களூர், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில், தனிவார்டாக மாற்றியதை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2019 10:15 PM GMT (Updated: 10 Dec 2019 10:20 PM GMT)

தனி வார்டாக மாற்றியதை ரத்து செய்யக்கோரி மங்களூர், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுபாக்கம், 

மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரங்கியம் கிராமத்தின் 9-வது வார்டில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பொது வார்டாக இருந்த இப்பகுதி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்காக, தனி வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனி வார்டாக அறிவித்ததை ரத்து செய்யக்கோரி அப்பகுதி மக்கள் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் தாசில்தாரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று மங்களூர் தேர்தல் அலுவலரிடம், உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க போவதாக கூறினர்.

அப்போது அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளாத கிராம மக்கள் ஒன்றிய அலுவலகம் முன்பு, அதிகாரிகளை கண்டித்தும், பொது வார்டாக மாற்றக்கோரியும் கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஸ்ரீநெடுஞ்சேரி ஊராட்சியில் சேல்விழி, ஸ்ரீநெடுஞ்சேரி, சாத்தாவட்டம் ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்காக மொத்தம் உள்ள 9 வார்டுகளில் 2,3,4,5,6 ஆகிய வார்டுகள் ஆதிதிராவிடர்களுக்கும், 1,7,8,9 ஆகியவை பொது வார்டுகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் ஆதிதிராவிடர் குடும்பமே இல்லாத 6-வது வார்டு தனி. பெண் வார்டாகவும், அதிகளவில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் 9-வது வார்டு பொது பெண் வார்டாகவும் தவறுதலாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குளறுபடியை சரி செய்யக்கோரி 6-வது வார்டு பொதுமக்கள் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று தங்களது வீடுகளில் கருப்புக்கொடியை ஏற்றி வைத்து, ஸ்ரீநெடுஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்து வந்த ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் புகழேந்தி, காட்டுமன்னார்கோவில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரியும், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய தேர்தல் அதிகாரியுமான சுகுமார் ஆகியோர், இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் மூலம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக கூறி கிராம மக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Next Story