கடலூரில், வியாபாரிகள் போட்டியால் வெங்காயம் கிலோ ரூ.10-க்கு விற்பனை


கடலூரில், வியாபாரிகள் போட்டியால் வெங்காயம் கிலோ ரூ.10-க்கு விற்பனை
x
தினத்தந்தி 11 Dec 2019 10:15 PM GMT (Updated: 2019-12-12T01:27:43+05:30)

கடலூரில் வியாபாரிகள் போட்டியால் வெங்காயம் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வெங்காயத்தை வாங்க பொதுமக்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கடலூர், 

உரிக்க உரிக்க கண்ணீரை வர வைக்கும் பல்லாரி (பெரியது) வெங்காயம் ஆந்திரா, கர்நாடகா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு, தமிழக பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தென்மேற்கு பருவமழை காலங்களில் மேற்சொன்ன மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்லாரி வெங்காயம் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக தமிழகத்திற்கு வரத்து முற்றிலும் குறைந்து போனதால், கடந்த சில வாரங்களாக பல்லாரி வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்தது.

கடலூருக்கும் குறைந்த அளவே வெங்காய மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. இதனால் அக்டோபர் மாத இறுதியில் கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்டு வந்த பல்லாரி (பெரியது) வெங்காயம் படிப்படியாக உயர்ந்து அதிகபட்சமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.180 வரைக்கும் விற்பனையானது.

இதேபோல் சாம்பார் வெங்காயத்தின் விலையும் உயர்ந்து தற்போது ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் கிலோ கணக்கில் வாங்கிய பொதுமக்கள், ¼ கிலோ, ½ கிலோ என குறைந்தளவே வெங்காயத்தை வாங்கி சென்றனர். மேலும் ஓட்டல்களில் வெங்காய பயன்பாட்டை குறைக்க தொடங்கினர்.

இந்நிலையில் பெங்களூருவில் இருந்து கடலூருக்கு பல்லாரி வெங்காயம் அதிகளவில் கொண்டு வரப்பட்டதால், நேற்று முன்தினம் பல்லாரி வெங்காயத்தின் விலை அதிரடியாக குறைந்தது. அதாவது ஒரு கிலோ பல்லாரி (சிறியது) வெங்காயம் ரூ.25-க்கும், நடுத்தர வெங்காயம் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கிச்சென்றனர். இதை பார்த்த மற்ற வியாபாரிகளும் பெங்களூருவில் இருந்து பல்லாரி வெங்காயத்தை வாங்கி வந்தனர். இதனால் கடலூரில் நேற்று பல்லாரி வெங்காயத்தின் விலை மேலும் குறைந்தது.

அதாவது கடலூர் முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட்டில் உள்ள ஒரு மொத்த விற்பனை கடையில் ஒரு கிலோ பல்லாரி (சிறியது) வெங்காயம் ரூ.10-க்கு விற்பனையானது. இதேபோல் நடுத்தரம் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இது பற்றி அறிந்ததும் பல்லாரி வெங்காயத்தை வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொருவரும் 2 முதல் 5 கிலோ வரை பைகளில் வாங்கிச்சென்றனர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் திரண்டதால் கடலூர்-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறைந்த விலைக்கு வெங்காயம் வாங்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் முண்டியடித்ததால் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் விரைந்து வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இதேபோல் கடலூர் உழவர் சந்தையில் ஒரு கிலோ பல்லாரி (சிறியது) வெங்காயம் ரூ.20-க்கும் நடுத்தர ரகம் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வியாபாரிகள் போட்டி போட்டு பெங்களூருவில் இருந்து வெங்காயத்தை வாங்கி வந்து, கடலூரில் குறைந்த அளவுக்கு விற்பனை செய்வதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story