நாமக்கல் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள் சுழற்சி முறையில் தேர்வு


நாமக்கல் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள் சுழற்சி முறையில் தேர்வு
x
தினத்தந்தி 12 Dec 2019 4:30 AM IST (Updated: 12 Dec 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள் நேற்று கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 1,729 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதில் 2 வார்டுகள் அடங்கிய வாக்குச்சாவடிகள் 893 ஆகும். ஒரு வார்டு வாக்குச்சாவடிகள் 836 ஆகும்.

ஒரு வார்டு வாக்குசாவடிகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் என மொத்தம் 7 பேர் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுவார்கள். 2 வார்டு வாக்குச்சாவடிகளில் 8 பேர் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ளனர்.

3 கட்டமாக பயிற்சி

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 3 கட்டமாக பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. முதற்கட்ட பயிற்சி வகுப்பு வருகிற 15-ந் தேதியும், 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு 21-ந் தேதியும், 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு 26-ந் தேதியும் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 14 ஆயிரத்து 26 பேர் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் முதற்கட்டமாக தேர்வு செய்யும் பணி நேற்று கலெக்டர் மெகராஜ் முன்னிலையில் நடந்தது. இதன் அடிப்படையில் பணி ஆணைகள் தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின்போது தேசிய தகவல் மைய அலுவலர் செல்வகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் டாக்டர் மணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஹசீனாபேகம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் தேர்தல்) கோவிந்தராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) அருளாளன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story