கமுதி அருகே, இளம்பெண் மர்ம சாவில் தந்தை உள்பட 2 பேர் கைது - ஓராண்டுக்குபின் நடந்த விசாரணையில் சிக்கினர்


கமுதி அருகே, இளம்பெண் மர்ம சாவில் தந்தை உள்பட 2 பேர் கைது - ஓராண்டுக்குபின் நடந்த விசாரணையில் சிக்கினர்
x
தினத்தந்தி 12 Dec 2019 3:45 AM IST (Updated: 12 Dec 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

கமுதி அருகே இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக ஓராண்டுக்கு பின்பு எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் நடந்த விசாரணையில் தந்தை உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கமுதி,

கமுதி அருகே உள்ள சின்ன உடப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகள் ஐஸ்வர்யா(வயது 19). இவருக்கும், அதே ஊரைச்சேர்ந்த பழனிமுருகன் என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணம் முடிந்த 5 மாதத்திலேயே இளம்பெண் ஐஸ்வர்யாவுக்கும், அதே ஊரைச்சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஐஸ்வர்யா 2 முறை வீட்டைவிட்டு சென்றுவிட்டாராம். அதனை தொடர்ந்து அவரது பெற்றோர்கள் அவரை அழைத்து வந்து வீட்டில் தங்க வைத்துள்ளனர். சம்பவத்தன்று இரவு ஐஸ்வர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மண்டலமாணிக்கம் போலீசார் இதனை தற்கொலை வழக்காக பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் ஓராண்டுக்கு பிறகு ஐஸ்வர்யாவின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து கமுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மதுமதி, செல்வராஜ் மற்றும் மண்டல மாணிக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில் இளம்பெண் ஐஸ்வர்யா திருமணத்துக்கு பிறகு 2 முறை வீட்டை விட்டு சென்றதால் ஏற்பட்ட அவமானத்தை தொடர்ந்து அவரது தந்தை முருகன் (42) தனது மகளை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதும், இதற்கு உடந்தையாக இவரது தம்பி சுரேஷ்(27) என்பவர் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மண்டல மாணிக்கம் போலீசார் இதனை கொலை வழக்காக மாற்றம் செய்து முருகன், இவரது தம்பி சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story