திருமானூரில் கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது பரிதாபம்: மின்சாரம் தாக்கி 4 பேர் படுகாயம்


திருமானூரில் கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது பரிதாபம்: மின்சாரம் தாக்கி 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 12 Dec 2019 11:15 PM GMT (Updated: 2019-12-13T00:42:37+05:30)

திருமானூரில் புதிதாக கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூரில் தஞ்சையில் இருந்து அரியலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அண்ணிமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜா(வயது 49) என்பவர் புதிதாக கடை ஒன்றை அமைத்து வருகிறார். அதற்காக இரும்பு ஷெட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

நேற்று இந்த பணியில் ஈடுபட்டிருந்த அண்ணிமங்கலம் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன் கலைவாணன்(27), கோவிந்தராஜ் மகன்கள் ராம்குமார்(23), ரவிக்குமார்(21) மற்றும் தங்கராசு மகன் ரமே‌‌ஷ்(32) ஆகிய 4 பேரும் சரக்கு ஆட்டோ மீது இரும்பு நாற்காலி மற்றும் ஏணியினை கட்டி அதன் மீது ஏறி நின்று வேலை பார்த்து வந்தனர். அப்போது அந்த வழியே சென்றுகொண்டிருக்கும் மின் கம்பிகள் மீது எதிர்பாராதவிதமாக சரக்கு ஆட்டோ மீது கட்டப்பட்டு இருந்த இரும்பு ஏணி உரசியுள்ளது.

4 பேர் படுகாயம்

இதனால் சரக்கு ஆட்டோவில் மின்சாரம் பாய்ந்து அதன் மீது ஏறி நின்று வேலை பார்த்துக்கொண்டிருந்த 4 பேர் மீதும் மின்சாரம் தாக்கியதால், தூக்கி வீசப்பட்டனர். இதில் அவர்களின் கை, கால் வயிற்றுப்பகுதி என பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனே இதுகுறித்து திருமானூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து திருமானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story