கிருஷ்ணகிரியில் ரஜினி பிறந்த நாள் விழா 550 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன


கிருஷ்ணகிரியில் ரஜினி பிறந்த நாள் விழா 550 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன
x
தினத்தந்தி 12 Dec 2019 10:30 PM GMT (Updated: 12 Dec 2019 10:13 PM GMT)

கிருஷ்ணகிரியில் நடந்த ரஜினி பிறந்தநாள் விழாவில் 550 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நேற்று ரஜினியின் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட செயலாளர் கே.வி.எஸ். சீனிவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நகைச்சுவை நடிகர் ஜீவா கலந்து கொண்டார்.

முதலில் காலை 8 மணியளவில் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கோ தானம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அணிவிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மீனாட்சி மகாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் பாபா மாதையன் வரவேற்றார்.

550 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

மாவட்ட இணை செயலாளர் கார்த்திகேயன், துணை செயலாளர் சலீம்பாஷா, மாவட்ட செயற்குழு ரஜினிசங்கர், சாதீக்பாஷா, ஆர்.ஆர். முத்து, மகளிரணி சுபலட்சுமி, வக்கீல் அணி கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் கே.வி.எஸ். சீனிவாசன், நடிகர் ஜீவா ஆகியோர் 550 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். அதன்படி 25 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், மூன்று சக்கர சைக்கிள், நாற்காலி, வாக்கிங் ஸ்டிக், தையல் எந்திரம், சலவை பெட்டிகள், மரக்கன்றுகள், விலையில்லா வேட்டி, சேலை, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்கள். முன்னதாக ரஜினியின் வாழ்கை வரலாறு புத்தகத்தை தனியார் பள்ளி நிறுவனர் சனத்குமார் வெளியிட்டார்.

இந்த விழாவில் நகைச்சுவை நடிகர் ஜீவா பேசியதாவது:-

ஆன்மிக அரசியல்

அறிவு, ஆக்கபூர்வமாக பேசுவதே ஆன்மிக அரசியல். விமர்சனங்கள் பற்றி கவலைப்படாமல், மக்கள் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும். நல்லது செய்வதில் தான் நாம் போட்டி போட வேண்டும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பல்வேறு நலத்திட்ட உதவிகளை, மக்கள் மன்றத்தினர் செய்து வருகின்றனர். ரஜினியால் மட்டுமே காமராஜர் போல் பொற்கால ஆட்சியை கொடுக்க முடியும்.

அரசியலுக்கு வருவதற்கான ஆயத்த பணிகளை ரஜினி மேற்கொண்டு வருகிறார். விவசாயம், தொழில்வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கான பணியை மக்கள் மன்றத்தினர் செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் பாண்டியன், வெங்கடேசன், சிவா, ஒன்றிய நிர்வாகிகள் ராஜேஷ், ராஜ்குமார், சின்னசாமி, சரவணன், குணா, கேசவன், முருகேசன், ரத்தினம்மாள், மஞ்சுநாத்ராவ், ரவி, சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story