வாடிப்பட்டி வாலிபர் கொலை வழக்கில் நண்பர்கள் கைது - பரபரப்பு வாக்குமூலம்


வாடிப்பட்டி வாலிபர் கொலை வழக்கில் நண்பர்கள் கைது - பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 14 Dec 2019 9:35 PM GMT (Updated: 14 Dec 2019 9:35 PM GMT)

வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த பெரியகருப்பன் என்பவரது மகனான பாண்டி (வயது 23) சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். கோவையில் வெல்டிங் வேலை செய்து வந்த அவர் கார்த்திகை திருவிழாவுக்காக ஊருக்கு வந்திருந்தபோது குலசேகரன்கோட்டை கோம்பை கரடு பகுதியில் கண்மாய் கரையில் கழுத்து அறுக்கப்பட்டு வயிற்றுபகுதியில் கத்திக்குத்து காயத்துடன் பிணமாக கிடந்தார். இதைத்தொடர்ந்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் உமா மகேஷ்வரி, கேசவராமச்சந்திரன், ஏட்டுகள் பெரியகருப்பன், ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடிவந்தனர்.

இதில் திண்டுக்கல் மாவட்டம் ஆவாரம்பட்டியை சேர்ந்த கருப்புசாமி(22) மற்றும் ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரேம்குமார்(24) ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர்.

அதை தொடர்ந்து போலீசாரிடம் கருப்புசாமி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பாண்டி, கருப்புசாமி, பிரேம்குமார் ஆகிய 3 பேரும் நண்பர்கள். சம்பவத்தன்று கருப்புசாமியின் மோட்டார் சைக்கிளில் 3 பேரும் கோம்பைகரடு பகுதிக்கு வந்து அங்கிருந்த சில நண்பர்களோடு சேர்ந்து மதுகுடித்துள்ளனர். அப்போது கருப்புசாமியின் சட்டைப்பையிலிருந்த ரூ.2ஆயிரத்தை பாண்டி எடுத்து மறைத்து வைத்துள்ளார்.

மேலும் மோட்டார்சைக்கிளின் சாவியை எடுத்து விளையாடியபோது கருப்புசாமிக்கும் பாண்டிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு விளையாட்டு விபரீதமாகி கைகலப்பு ஏற்பட்டது. அப்போது பாண்டியை கொலை செய்ேதாம். இவ்வாறு கருப்புசாமி வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கருப்புசாமி, பிரேம்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். 2 பேரையும் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Next Story