மத்திய அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்க கோரி கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்கள் போராட்டம்


மத்திய அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்க கோரி கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2019 4:30 AM IST (Updated: 15 Dec 2019 9:20 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்க கோரி கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக திருச்சியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட 3 எண்ணெய் நிறுவனங்களின் கியாஸ் சிலிண்டர்களை அங்கீகாரம் பெற்ற முகவர்களிடம் இருந்து வீடுகளுக்கு வினியோகம் செய்யும் பணியை தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள்.

இவர்கள் தமிழ்நாடு எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரிமேன்ஸ் தொழிற்சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தை நடத்தி வருகிறார்கள். இந்த சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று திருச்சியில் மாநில தலைவர் கணேஷ் தலைமையில் நடந்தது.

போராட்டம்

கூட்டத்தில் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் தொழிலாளர்கள் வீடுகளில் ரூ.20 முதல் ரூ.50 வரை டிபஸ் வாங்குவது உண்மை தான். இதனை யாரும் கொடுக்க வேண்டாம் என இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். எங்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்து உள்ள சம்பளத்தை (ரூ.18,500) வழங்கி விட்டால் நாங்கள் யாரிடமும் இனாம் வாங்க மாட்டோம்.

எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் ஏஜென்சிகளுக்கு கமிஷன் தொகையை வழங்கி வருகிறார்கள். ஆனால் அந்த தொகையை தொழிலாளர்களுக்கு வழங்க மறுப்பதால் தான் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக டிப்ஸ் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே சம்பளம் வழங்க வலியுறுத்தி விரைவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உண்ணாவிரதம்

கூட்டம் முடிந்த பின்னர் கணேஷ் நிருபர்களிடம் கூறுகையில் ‘தமிழகம் முழுவதும் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்கள் சுமார் ஒரு லட்சம் பேர் உள்ளனர். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அவர்களை ஒன்று திரட்டி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் உண்ணாவிரதம் நடத்தும் போராட்ட தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ என்றார்.

கூட்டத்தில் மாவட்ட தலைவர் சந்தி்ரமோகன், மாநில செயலாளர் சிக்கந்தர், பரமசிவம், ராஜேந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story