நடப்பாண்டில் இதுவரை மேட்டூர் அணை நீர்மட்டம் 76-வது நாளாக 120 அடியாக நீடிப்பு


நடப்பாண்டில் இதுவரை மேட்டூர் அணை நீர்மட்டம் 76-வது நாளாக 120 அடியாக நீடிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2019 11:15 PM GMT (Updated: 18 Dec 2019 4:51 PM GMT)

நடப்பாண்டில் இதுவரை மேட்டூர் அணை நீர்மட்டம் இன்றுடன் 76-வது நாளாக 120 அடியாக உள்ளது.

மேட்டூர்,

தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் இந்த ஆண்டு பருவமழை தீவிரம் அடைந்தது. இந்த மழை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை இந்த ஆண்டு 4 முறை நிரம்பியது.

குறிப்பாக இந்த ஆண்டில் முதலில் செப்டம்பர் மாதம் 7-ந் தேதியும், அதே மாதம் 24-ந் தேதியும், அக்டோபர் மாதம் 23-ந் தேதியும் அணை நிரம்பிய நிலையில், கடந்த மாதம் 11-ந் ேததி அணை 4-வது முறையாக நிரம்பியது. அணை நிரம்பி உள்ள நிலையில், அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நேரங்களில் அதிகரித்தும், நீர்வரத்து குறையும் நேரங்களில் தண்ணீர் திறப்பு குறைத்தும் மாறி, மாறி திறந்து விடப்படுகிறது. இதில் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 15 நாட்களும், செப்டம்பர் மாதம் 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 6 நாட்களும், அக்டோபர் மாதம் 23-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 7-ந் தேதி வரை 16 நாட்களும் அணை நீர்மட்டம் 120 அடியாக இருந்துள்ளது.

இந்த நிலையில் 4-வது முறையாக அணை நிரம்பிய கடந்த மாதம் 11-ந் தேதி முதல் இன்று(வியாழக்கிழமை) வரை அணை நீர்மட்டம் 39 நாட்களாக 120 அடியாக உள்ளது. இதன்மூலம் நடப்பாண்டில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்றுடன் 76 நாட்களாக 120 அடியாக இருந்து வருகிறது. இதனால் அணையில் தண்ணீர் ததும்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.

அதே நேரத்தில் எந்த ஆண்டும் இல்லாத நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணை தண்ணீர் பச்சை நிறமாக மாறி காட்சி அளிக்கிறது. மேலும் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் பல்வேறு இடங்களில் தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

இதை தடுக்க பொதுப்பணி்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் மேட்டூர் நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் மேட்டூர் அணை மற்றும் நீர்த்தேக்க பகுதிகளில் பச்சை நிறமாக மாறிய தண்ணீரில் திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் தெளிப்பான் தெளித்து துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு கடந்த சில நாட்களாக வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று காலை முதல் கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ள நிலையில், அணைக்கு வரும் நீர்வரத்து, அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 600 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 

Next Story