எகிப்து, துருக்கி, அரபுநாடுகளில் இருந்து வந்தது: தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் குவிந்த வெளிநாட்டு வெங்காயம்


எகிப்து, துருக்கி, அரபுநாடுகளில் இருந்து வந்தது: தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் குவிந்த வெளிநாட்டு வெங்காயம்
x
தினத்தந்தி 18 Dec 2019 11:00 PM GMT (Updated: 18 Dec 2019 6:57 PM GMT)

எகிப்து, துருக்கி, சவுதி அரேபியாவில் இருந்து தஞ்சை காமராஜர் மார்க்கெட்டுக்கு வெங்காயம் வந்து குவிகிறது. மீண்டும் விலை ஏறுமுகத்தில் இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை காமராஜர் மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இது தவிர கர்நாடக மாநிலத்தில் இருந்தும் மராட்டிய மாநிலத்தில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் பல்லாரி அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

முன்பு இந்த பகுதிகளில் இருந்து 4 லாரிகளில் பல்லாரி விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் அங்கு பெய்த மழை காரணமாக வெங்காய சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு உற்பத்தி வெகுவாக குறைந்தது.

வரத்து குறைந்தது

இதனால் அங்கிருந்து பல்லாரி வரத்து வெகுவாக குறைந்து விட்டது. தற்போது நாள்தோறும் 1 லாரியில் மட்டுமே பல்லாரி விற்பனைக்கு வருகிறது. தமிழகத்திலும் உற்பத்தி வெகுவாக குறைந்ததால் பல்லாரி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்லாரி கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சின்ன வெங்காயம் வரத்து குறைவு காரணமாக ரூ.200 வரையில் விற்பனை செய்யப்பட்டது.

எகிப்து-துருக்கி, அரபு நாடுகள்

இதையடுத்து விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன்படி துருக்கி மற்றும் எகிப்து நாட்டில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்தது. இந்த வெங்காயம் பீட்ரூட் நிறத்தில் இருந்ததால் இதனை பீட்ரூட் வெங்காயம் என அழைத்தனர். மேலும் இந்த வெங்காயத்தில் காரத்தன்மை குறைவாக இருந்ததால் அதனை வாங்குவதற்கும் மக்கள் தயக்கம் காட்டினர்.

இதனால் தஞ்சைக்கு வந்த எகிப்து வெங்காயம் வேறுமாவட்டங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. தற்போது மீண்டும் எகிப்து நாட்டில் இருந்து வேறு நிறத்தில் வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. முன்பு வந்த வெங்காயம் பீட்ரூட் நிறத்தில் காணப்பட்டது. ஆனால் நேற்று வந்த வெங்காயம் லேசான பழுப்பு நிறத்தில், தோல் மெல்லியதாக காணப்பட்டது. தோலை உரித்தால் வெள்ளை நிறத்தில் வெங்காயம் காணப்படுகிறது.

400 முதல் 800 கிராம் வரை.....

இதேபோல் துருக்கி நாட்டில் இருந்து வந்த வெங்காயம் சற்று நீளமாக காணப்படுகிறது.. இந்த வெங்காயம் நமது நாட்டு வெங்காயம் போன்ற கலரில் உள்ளது. அரபு நாடுகளில் இருந்த வந்த வெங்காயம் சற்று கருப்பு நிறத்தில் காணப்படுகிறது.. தஞ்சை மார்க்கெட்டுக்கு மட்டும் நேற்று 2 டன் வெங்காயம் வந்தது.

அரபுநாடுகளில் இருந்து வந்த வெங்காயம், நமது நாட்டு வெங்காயம் போன்ற காரத்தன்மை உள்ளது. மேலும் இந்த வெங்காயம் ஒவ்வொன்றும் 400 கிராம் முதல் 800 கிராம் எடை வரை உள்ளது. மிகவும் பெரிய அளவிலான வெங்காயமாக இருப்பதால் இதனை வாங்க பொதுமக்கள் தயங்குகிறார்கள். மேலும் முன்பு கிலோ ரூ.110-க்கு விற்ற வெளிநாட்டு வெங்காயம் நேற்று ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மீண்டும் விலை உயர்வு

இதேபோல் முன்பு நாட்டு பல்லாரி ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் கிலோ ரூ.120 ஆக குறைந்தது. தற்போது விலை மீண்டும் உயர்ந்து நேற்று கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயம் முன்பு ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவும் கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து நேற்று ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து வெங்காய மொத்த வியாபாரி சிதம்பரம் கூறுகையில், ‘‘வடமாநிலங்களில் போராட்டம் காரணமாக வெங்காயம் வரத்து இல்லை. இதனால் தற்போது வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் வெங்காயத்தை தற்போது மக்கள் வாங்க தொடங்கி விட்டனர். ஆனால் அது அளவில் பெரிதாக இருப்பதால் 1 கிலோவுக்கு 2 வெங்காயம் மட்டுமே உள்ளது. இதனால் சிறிய, சிறிய வெங்காயமாக தாருங்கள் என கேட்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் வெங்காயத்தை ஓட்டல் மற்றும் கடைக்காரர்கள்தான் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.’’ என்றார்.

Next Story