நாமக்கல் மண்டலத்தில் வாரந்தோறும் 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில் வாரந்தோறும் 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம்
x
தினத்தந்தி 18 Dec 2019 11:00 PM GMT (Updated: 18 Dec 2019 8:38 PM GMT)

நாமக்கல் மண்டலத்தில் இனிவரும் காலங்களில் வாரந்தோறும் 3 நாட்கள் முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று நாமக்கல்லில் கோழிப்பண்ணையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிங்கராஜ் வரவேற்று பேசினார். இதில் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவரும், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினமான ஏ.கே.பி.சின்ராஜ் பேசும்போது கூறியதாவது:-

கோழிப்பண்ணை தொழில் கடந்த 9 மாத காலமாக கடுமையான ந‌‌ஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதற்கு பண்ணையாளர்கள் இடையே ஒற்றுமை இல்லாததே காரணம். அனைவரும் கலந்து பேசினால் தொழிலை வெற்றிகரமாக நடத்த முடியும்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கோழிப்பண்ணை சங்க நிர்வாகிகளை அழைத்து கூட்டத்தை கூட்டி முட்டை விலையை அறிவித்தால் அனைவருக்கும் பயன் தருவதாக இருக்கும். இதேபோல் மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரிப்பது போல தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழுவின் நாமக்கல் மண்டலத்தையும் பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரித்தால் முட்டைக்கு கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு எங்களையும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவுகளை எடுத்தால், நாங்களும் பண்ணையாளர்களுக்கு முட்டைக்கு அதிக விலை கிடைக்க உறுதுணையாக இருப்போம். அதே சமயம் வியாபாரிகளும் ந‌‌ஷ்டம் அடைய வேண்டும் என எண்ண கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

‘வெப்சைட்’ தொடக்கம்

முன்னதாக பேசிய நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் துணை தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம், வருகிற ஜனவரி மாதம் முதல் கோழிப்பண்ணையாளர்களின் நலனுக்காக தனி ‘வெப்சைட்’ தொடங்க இருப்பதாகவும், இதில் கோழிப்பண்ணையாளர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் இடம்பெறும் என்றும் கூறினார். மேலும் முட்டை விலையை வாரம் 3 நாட்கள் என நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதை தொடர்ந்து டாக்டர் செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து 50 காசுகள் முதல் 60 காசுகள் வரை குறைத்து விற்பனை செய்தனர். எனவே மைனஸ் விலையை கட்டுப்படுத்த தினசரி முட்டை விலை நிர்ணயம் செய்யும் முறையை கொண்டு வந்தோம்.

3 நாட்கள் விலை நிர்ணயம்

தற்போது மைனஸ் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளதால், இனிவரும் காலங்களில் திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமை என வாரத்திற்கு 3 நாட்கள் முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த விலை நிர்ணயம் எப்போது அமலுக்கு வரும் என்பதை முட்டை வியாபாரிகளிடம் உறுதிமொழி பெற்று அறிவிப்போம். அதன் பிறகு மைனஸ் வந்தால், தினசரி விலை நிர்ணயத்திற்கு மாற்றி விடுவோம்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டலத்தை பிரிக்க வேண்டும் என்பது என்னை பொறுத்த வரையில் நல்ல கருத்து அல்ல.

3¼ கோடி முட்டைகள் உற்பத்தி

முட்டைக்கு அகில இந்திய அளவில் மார்க்கெட் நிலவரத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நாமக்கல்லுக்கு என தனியாக விலை நிர்ணயம் செய்ய முடியாது. நாமக்கல் மண்டலத்தில் தற்போது நாள்ஒன்றுக்கு சுமார் 3¼ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டை உற்பத்தி அதிகரிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் முதன்மை செயல் அதிகாரி எழில்குமார், உதவி பொது மேலாளர் பாலசுப்பிரமணியம், நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளன தலைவர் முத்துசாமி, முட்டை வியாபாரிகள் சங்க தலைவர் பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், கோழிப்பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் செயற்குழு உறுப்பினர் தங்கமுத்து நன்றி கூறினார்.

Next Story