மின் கம்பி தாழ்வாக சென்றதால் விபத்து: மின்சாரம் தாக்கி விவசாயி பலி - கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
இளையான்குடி அருகே தாழ்வாக சென்ற மின் கம்பியால் மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார். இதைத் தொடர்ந்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இளையான்குடி,
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள தெற்குகீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 39). விவசாயியான இவர் நேற்று முன்தினம் தனது மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக வயலுக்கு சென்றார். பின்னர் புல் அறுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அவர் காமாட்சி அம்மன் கோவில் அருகே வந்தபோது, தாழ்வாக தொங்கிய மின்கம்பி எதிர்பாராதவிதமாக இவர் மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கோவிந்தன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் மின் வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நடந்தது எனக்கூறி பஸ் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய் அதிகாரிகள், போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து மறியலை கிராம மக்கள் கைவிட்டனர். மேலும் கோவிந்தன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க ேவண்டும் எனவும், கோவிந்தன் மனைவி மாதவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர். கோவிந்தனுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இது குறித்து அப்பகுதிமக்கள் கூறியதாவது:-
தாழ்வாக சென்ற மின் கம்பியை சரி செய்யக்கோரி கடந்த 3 மாதங்களாக புகார் தெரிவித்தும் மின் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சம்பவம் நடந்த அன்று மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கோவிந்தன் மின்சாரம் தாக்கி இறந்தார். அவ்வாறு அறிவித்தபடி மின்சாரத்தை நிறுத்தியிருந்தாலோ அல்லது தாழ்வான மின் கம்பியை சரிசெய்திருந்தாலோ கோவிந்தன் இறப்பு சம்பவம் நடந்திருக்காது. மின் வாரியத்தின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நடந்துள்ளது. எனவே அதிகாரிகள் கோவிந்தன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story