கர்நாடகத்தை மற்றொரு காஷ்மீராக உருவாக்க எடியூரப்பா நினைக்கிறார்; சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு
பா.ஜனதா ஆட்சியில் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்றும், கர்நாடகத்தை மற்றொரு காஷ்மீராக உருவாக்க எடியூரப்பா நினைக்கிறார் என்றும் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பெங்களூரு,
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நேற்று முன்தினம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது வன்முறை வெடித்தது. இதனால் போலீசார் தடியடியும், துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இதில் 2 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்த போராட்டக்காரர்களையும் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார், முன்னாள் மந்திரிகள் எம்.பி.பட்டீல், பசவராஜ் ராயரெட்டி, சீதாராம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உக்ரப்பா ஆகியோர் பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு விமானம் மூலம் சென்றனர்.
அப்போது அவர்களை மங்களூரு விமான நிலையம் முன்பு வைத்தே போலீசார் கைது செய்தனர். அவர்களுடன் சேர்ந்து முன்னாள் முதல்-மந்திரியும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவும் செல்ல இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டதும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரமேஷ் குமாரும், உக்ரப்பாவும் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
முன்னதாக வேனில் ஏற்றப்பட்டதும் எம்.பி.பட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய, மாநில அரசுகள் உடனே இவற்றை நிறுத்த வேண்டும். இது ஜனநாயகத்திற்கு விரோதமாக ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சிபோல் உள்ளது. நாங்கள் அனைவரும் மக்கள் பிரதிநிதிகள். நான் கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவன். நாங்கள் போராட்டத்தின்போது காயமடைந்தவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பார்க்க வேண்டும்.
நாங்கள் மக்களை சந்தித்து அமைதியாக இருக்கக்கூறி வலியுறுத்துவோம். அது அரசுக்கு உதவிகரமாக இருக்கும். தடை சட்டம் இருந்தாலும் நான் தனி ஆளாக சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பேன். என்னை யாரும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே நேற்று துப்பாக்கி சூட்டில் பலியான மங்களூரு குத்ரோலி பகுதியைச் சேர்ந்த ஜலீல், பைங்கெரே பகுதியைச் சேர்ந்த நவுசின் ஆகியோரின் உடல்கள் வென்லாக் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் மந்திரி யு.டி.காதர் எம்.எல்.ஏ., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொய்தீன் பாவா, பாரூக் எம்.எல்.சி., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இவான் டிசோசா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வென்லாக் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
அவர்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியான 2 பேரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் யு.டி.காதர் நிருபர்களிடம் கூறுகையில், “துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் இறுதிச்சடங்குகள் இன்று (அதாவது நேற்று) மாலை 5 மணிக்கு நடைபெறும்“ என்று தெரிவித்தார்.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர்கள் மங்களூருவில் கைது செய்யப்பட்டதை கண்டித்து பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மங்களூருவில் உள்ள மக்களிடம் பேச எங்களுக்கு (காங்கிரஸ் தலைவர்கள்) உரிமை இருக்கிறது. அவர்களுக்கு உண்மையை தெரிவிக்க முயற்சிப்போம். காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இது ஜனநாயகத்திற்கும், அரசியல் அமைப்பிற்கும் விரோதமானது.
எடியூரப்பாவும், பா.ஜனதா அரசும் கர்நாடகத்தை மற்றொரு காஷ்மீராக உருவாக்க நினைக்கிறார்கள். பா.ஜனதா ஆட்சியில் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைவர்கள் மங்களூருவில் நிலவும் சூழ்நிலையை பார்வையிடத்தான் சென்றனர்.
ஆனால் அவர்களை கைது செய்ததை நான் கடுமையாக கண்டிக்கிறேன். நானும் விமானம் மூலம் மங்களூருவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் பட்டியலில் உள்ள விமானங்கள் மட்டுமே மங்களூரு விமான நிலையத்தில் இருந்து புறப்படவும், வந்து இறங்கவும் வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்காரணமாக நான் செல்ல இருந்த விமானத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இதனால்தான் என்னால் திட்டமிட்டபடி மங்களூருவுக்கு செல்ல முடிவியல்லை. இது என்னுடைய உரிமையை அடக்குவதாகவும், ஜனநாயகத்தை படுகொலை செய்வதும்போல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story