மின்இணைப்பை துண்டிக்க சென்ற ஊழியரிடம், நிருபர்கள் என்று மிரட்டிய அண்ணன்-தம்பி கைது


மின்இணைப்பை துண்டிக்க சென்ற ஊழியரிடம், நிருபர்கள் என்று மிரட்டிய அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 25 Dec 2019 3:45 AM IST (Updated: 25 Dec 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் மின்இணைப்பை துண்டிக்கச் சென்ற ஊழியரிடம் தங்களை நிருபர்கள் என்று கூறி மிரட்டிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி,

தேனி அருகே உள்ள அய்யனார்புரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 45). இவர், தேனி மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் தேனி சடையால் முனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு உள்ளூர் கேபிள் டி.வி. அலுவலகத்திற்கு சென்றார். மின்இணைப்பு செலுத்தாத காரணத்தால் அங்குள்ள மின்இணைப்பை துண்டித்துள்ளார்.

அப்போது அங்கு இருந்த நந்தகுமார் (32), அவருடைய தம்பி முரளிதரன் (30) ஆகிய இருவரும், அழகர்சாமியை அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்து, அவரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், அவருடைய மோட்டார் சைக்கிள் சாவியை பறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து தேனி போலீஸ் நிலையத்தில் அழகர்சாமி இந்த சம்பவம் குறித்து புகார் செய்தார். இந்நிலையில், நேற்று காலையில் போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தேனி என்.ஆர்.டி. நகரில் மின்வாரிய ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், ‘மின்வாரிய ஊழியரை மிரட்டிய நபர்கள் தங்களை தொலைக்காட்சி நிருபர்கள் என்று கூறியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் செய்வோம்’ என்றனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நந்தகுமார், முரளிதரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட இருவரும் உள்ளூர் கேபிள் டி.வி. நடத்துகின்றனர். தங்களை பிரபல தனியார் தொலைக்காட்சியின் நிருபர்கள் என்று கூறி மிரட்டியுள்ளனர். விசாரணையில் அவர்கள் நிருபர்கள் இல்லை என்று தெரியவந்துள்ளது’ என்றார்.

Next Story