வையம்பட்டி அருகே பூத் சிலிப்பில் ஊர்பெயர் மாறியதால் பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


வையம்பட்டி அருகே பூத் சிலிப்பில் ஊர்பெயர் மாறியதால் பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 26 Dec 2019 4:30 AM IST (Updated: 25 Dec 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

வையம்பட்டி அருகே பூத் சிலிப்பில் ஊர் பெயர் மாறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பழையகோட்டை ஊராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்டது உப்பாத்துப்பட்டி. இந்த கிராமத்தில் சுமார் 180-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். உப்பாத்துப்பட்டி மற்றும் அருகில் உள்ள பேச்சக்காப்பட்டி வாக்காளர்கள் பழையகோட்டையில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தான் வாக்களிக்க வேண்டும்.

பஸ்கள் சிறைபிடிப்பு

இந்தநிலையில் உப்பாத்துபட்டியில் வசிக்கும் வாக்காளர்களின் ஊர் பெயரின் அருகில் உள்ள பேச்சாக்கப்பட்டியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தாங்கள் உப்பாத்துப்பட்டியில் வசிக்கின்றோம். ஆனால் எங்களை அருகில் உள்ள பேச்சக்காம்பட்டியைச் சேர்ந்தவர்கள் போல் கூறியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே உப்பாத்துபட்டியில் உள்ள அனைத்து வாக்காளர்களின் பூத் சிலிப்பிலும் உப்பாத்துபட்டி என்று இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை அந்த வழியாக வந்த 2 அரசு பஸ் உள்பட 3 பஸ்களை சிறைபிடித்து அப்பகுதி பொதுமக்கள் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலை அறிந்த மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் மற்றும் வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களை சமரசம் செய்தனர். பின்னர், இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story