கடலூரில் பரபரப்பு 1,352 காமாட்சி விளக்குகள் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை சோதனையில் சிக்கியது


கடலூரில் பரபரப்பு 1,352 காமாட்சி விளக்குகள் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை சோதனையில் சிக்கியது
x
தினத்தந்தி 26 Dec 2019 4:30 AM IST (Updated: 25 Dec 2019 11:48 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் காரில் எடுத்து வரப்பட்ட 1,352 காமாட்சி விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடலூர்,

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் தலா 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஓட்டுக்காக பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளதால் பறக்கும்படையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தாசில்தார் கீதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் எழில்குமார், போலீஸ்காரர்கள் ராஜகோபால், வெங்கடாஜலபதி ஆகியோரை கொண்ட 2-வது பறக்கும்படையினர் கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே நேற்று காலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காருக்குள் இருந்த 9 சாக்கு மூட்டைகளை தேர்தல் பறக்கும் படையினர் பிரித்து பார்த்தனர். அதில் 1,352 பித்தளை காமாட்சி விளக்குகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 38 ஆயிரமாகும்.இது தொடர்பாக கார் டிரைவர் புதுச்சேரி வில்லியனூர் ஆரிப்பாளையத்தை சேர்ந்த சண்முகபிரியன்(வயது 31) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கிளிஞ்சிக்குப்பத்தில் இருந்து காமாட்சி விளக்குகளை ஏற்றிக்கொண்டு குறிஞ்சிப்பாடியில் உள்ள பாத்திரக்கடைக்கு கொண்டு செல்ல இருந்ததாக தெரிவித்தார். ஆனால் அதற்கு உரிய ஆவணம் அவரிடம் ஏதும் இல்லாததால் பறக்கும் படையினர் காமாட்சி விளக்குகளை பறிமுதல் செய்து கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், காமாட்சி விளக்குகள் வாக்காளர்களுக்கு வினியோகிக்க எடுத்து செல்லப்பட்டதா? என அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின் றனர்.

Next Story