சூரிய கிரகணம் வேலூரில் தெரிந்தது - பிரமிப்பாக இருந்ததாக சிறுவர்கள் மகிழ்ச்சி


சூரிய கிரகணம் வேலூரில் தெரிந்தது - பிரமிப்பாக இருந்ததாக சிறுவர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 26 Dec 2019 10:00 PM GMT (Updated: 26 Dec 2019 4:08 PM GMT)

சூரியகிரகணம் வேலூரில் தெளிவாக தெரிந்தது. சூரியகிரகணத்தை பார்க்க அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்மூலம் பார்த்தபோது பிரமிப்பாக இருந்ததாக சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

வேலூர், 

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில், ஒரே நேரத்தில் வருவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரியகிரகணம் நேற்று ஏற்பட்டது. சூரியகிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என்பதால் பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த சூரியகிரகணம் வேலூரிலும் நேற்று மிகத்தெளிவாக தெரிந்தது. இதை பார்ப்பதற்கு வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதனால் காலை 7 மணிக்கே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அறிவியல் மையத்துக்கு வரத்தொடங்கினர். அவர்களுக்கு சன் கிளாஸ், வெல்டிங் கிளாஸ், சிறுவர்களுக்கு சிறிய கண்ணாடி பொருத்தப்பட்ட பந்துகள் வழங்கப்பட்டது. மேலும் தொலைநோக்கியும் வைக்கப்பட்டிருந்தது.

இதில் நூற்றுக்கணக்கானவர்கள் குடும்பத்துடன் வந்து சூரியகிரகணத்தை பார்த்தனர். காலை 8.07 மணிக்கு தொடங்கிய கிரகணம் 11.16 மணிவரை நீடித்தது. அப்போது சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் வரிசையில்சென்று தொலைநோக்கி மூலமும், சன் கிளாஸ், வெல்டிங் கிளாஸ் மூலமும் பார்த்து மகிழ்ந்தனர். சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்ததாகவும் அவர்கள் கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் மைய அலுவலர் துரைராஜன் செய்திருந்தார்.

அதேபோன்று பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளின் மாடியில் இருந்தும், தெருக்களில் நின்றும் சூரியகிரகணத்தை பார்த்தனர்.

மாவட்ட அறிவியல் மையத்தில் சூரிய கிரகணம் பார்த்தது குறித்து சிறுமிகள் கூறியதாவது:-

சேண்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரேயா நெப்போ:-

சேண்பாக்கத்தில் இருந்து வந்திருக்கிறோம். இங்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் சூரியகிரகணத்தை பார்த்தேன். மிகவும் தெளிவாக சூரியகிரகணம் தெரிந்தது. பார்வையாளர்களுக்கு வெல்டிங் கிளாஸ், சன்கிளாஸ், கண்ணாடி பொருத்தப்பட்ட சிறிய பந்து வழங்கினார்கள். தொலைநோக்கியும் வைத்துள்ளனர். இதனால் சிரமமின்றி சூரியகிரகணத்தை நன்றாக பார்க்க முடிந்தது.

ரங்காபுரத்தை சேர்ந்த அர்ஷிதா:-

சூரிய கிரகணகத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என்பதால் எங்கள் குடும்பத்துடன் இங்கு வந்துள்ளோம். சூரியகிரகணம் தெளிவாகதெரிந்தது. ஒவ்வொரு கண்ணாடியில் பார்க்கும்போதும் ஒவ்வொரு கலராகவும், பிரமிப்பாகவும் இருந்தது.

சத்துவாச்சாரியை சேர்ந்த திவ்யதர்ஷினி:-

மாவட்ட அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொலைநோக்கி மூலம் பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். தொலைநோக்கியில் பார்க்கும்போது வெள்ளை நிறமாகவும், சன்கிளாஸ் மூலம் பார்க்கும்போது ஆரஞ் நிறமாகவும், வெல்டர் கிளாஸ் மூலம் பார்க்கும்போது பச்சை நிறமாகவும் தெரிந்தது. தெளிவாகவும் தெரிந்தது. சூரியகிரகணத்தை பார்த்தபோது மிகவும் பிரமிப்பாக இருந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story