நகைகளை ஏலம் விடுவதை கண்டித்து வங்கிக்கு பூட்டு போட முயன்ற விவசாயிகளால் பரபரப்பு


நகைகளை ஏலம் விடுவதை கண்டித்து வங்கிக்கு பூட்டு போட முயன்ற விவசாயிகளால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Dec 2019 4:30 AM IST (Updated: 27 Dec 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி அருகே நகைகளை ஏலம் விடுவதை கண்டித்து வங்கிக்கு விவசாயிகள் பூட்டு போட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

லால்குடி,

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த காட்டூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இங்கு கடந்த 2014-ம் ஆண்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் விவசாயிகள் வாங்கிய கடன் தொகைக்கு மேல் கூடுதலாக வங்கி மேலாளர் கையொப்பமிட்டு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் ரூ. 18 கோடி வரை கடன் பெற்று விவசாயிகளை மோசடி செய்த வங்கி மேலாளரை கைது செய்ய வலியுறுத்தியும், 2015 முதல் 2018 வரை பயிர் கடன்களுக்காக விவசாயிகள் வங்கியில் அடகு வைத்த நகைகளை ஏலம் விடுவதை கண்டித்தும் வங்கிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.

போலீசார் தடுத்தனர்

இந்த அறிவிப்பின்படி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை வங்கி முன் திரண்டு நின்றனர். அவர்கள் கோஷம் எழுப்பிய படி வங்கிக்கு பூட்டு போட முயன்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது வங்கி முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர் வங்கி மேலாளர் சித்தன் மற்றும் வங்கி அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகாரிகள் உறுதி

இதில் விவசாய கடன்களுக்காக அடகு வைக்கப்பட்ட 60 விவசாயிகளின் நகைகளை ஏலம் விடக்கூடாது அறுவடை காலம்வரை அவகாசம் வழங்க வேண்டும். விவசாயிகளின் பெயரில் பணமோசடி செய்த மேலாளரை கைது செய்யவேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு வங்கி மேலாளர் மீது வங்கி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. தற்போது விவசாயிகள் பயிர் கடனுக்காக அடகு வைத்த நகைகளை திருப்பிக் கொள்ள ஜனவரி மாதம் இறுதிவரை கால அவகாசம் தருவது என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த உறுதியை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Next Story