முதுமலை வனப்பகுதியில், சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற வனத்துறை வாகனத்தை வழிமறித்த சிறுத்தைப்புலி


முதுமலை வனப்பகுதியில், சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற வனத்துறை வாகனத்தை வழிமறித்த சிறுத்தைப்புலி
x
தினத்தந்தி 28 Dec 2019 4:15 AM IST (Updated: 27 Dec 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

முதுமலை வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற வனத்துறை வாகனத்தை சிறுத்தைப்புலி வழிமறித்தது.

மசினகுடி,

தமிழகத்தில் முதுமலை, சத்தியமங்கலம் உள்பட 4 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இது 100-க்கும் மேற்பட்ட புலிகள் வாழக்கூடிய சிறந்த புலிகள் காப்பகம் என்ற பெயர் கொண்டுள்ளது. இங்கு அதிகமான புலிகள் இருப்பது போலவே சிறுத்தைப்புலிகளும் அதிகமாக உள்ளன. அவற்றின் எண்ணிக்கையும் ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு உதாரணம் சமீப காலங்களாக முதுமலையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அடிக்கடி புலிகளுடன், சிறுத்தைப்புலிகளையும் நேரில் பார்த்து வருகின்றன. மேலும் கணக்கெடுப்பின்போதும் அவை அதிகளவில் தென்படுகின்றன. குறிப்பாக தெப்பக்காடு வனப்பகுதிக்குள் வனத்துறை வாகனத்தில் சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் ஏராளமான சிறுத்தைப்புலிகளை நேரடியாக கண்டு ரசித்து வருகின்றனர். அவைகள் மரத்தின் மீது ஏறி படுத்து உறங்குவதையும், சாலைகளில் நடந்து செல்வதையும் காண முடிகிறது.

இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி காலை சுமார் 25-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் சென்ற வனத்துறை வாகனத்தை பொன்னங்கிரி சாலையில் சிறுத்தைப்புலி ஒன்று வழிமறித்தது.

வனத்துறை வாகனத்தை கண்டு சிறிதும் அச்சப்படாத அந்த சிறுத்தைப்புலி, அதே இடத்தில் சுமார் 15 நிமிடம் வழிவிடாமல் அமர்ந்தது. உடனே டிரைவரும் வாகனத்தை நிறுத்திவிட்டு, சிறுத்தைப்புலி அங்கிருந்து வழிவிட்டு செல்லும் வரை காத்திருந்தார். சிறுத்தைப்புலிகள் பொதுவாக வாகனத்தையோ அல்லது மனிதர்களையோ கண்டவுடன் புதருக்குள் ஓடி மறைந்து கொள்ளும் தன்மை கொண்டு உள்ளன. ஆனால் இந்த சிறுத்தைப்புலி அதற்கு நேர்மாறாக சாலையில் அமர்ந்திருந்தது. அதனை கண்டு வனத்துறையினர் மற்றும் சுற்றுலா பயணிகள் வியப்படைந்ததுடன் புகைப்படம் எடுத்து ரசித்தனர். சில சுற்றுலா பயணிகள் வாகனத்தின் ஜன்னல் வழியாக தலையை வெளியில் நீட்டி பார்த்தனர்.

இந்த காட்சியை அந்த சாலையில் எதிர்புறமாக மற்றொரு வனத்துறை வாகனத்தில் வந்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து வெளியிட்டு உள்ளனர். அவர்களும் அந்த சிறுத்தைப்புலி வழிவிடும் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 15 நிமிடத்திற்கு பிறகு அந்த சிறுத்தைப்புலி எழுந்து வாகனங்கள் செல்ல வழிவிட்டு அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னர் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story