தேசிய மக்கள் தொகை பதிவேடு விவகாரம்: மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி, அரசியல் நாடகமாடி சூழ்ச்சி செய்கிறார்


தேசிய மக்கள் தொகை பதிவேடு விவகாரம்: மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி, அரசியல் நாடகமாடி சூழ்ச்சி செய்கிறார்
x
தினத்தந்தி 29 Dec 2019 4:45 AM IST (Updated: 28 Dec 2019 11:14 PM IST)
t-max-icont-min-icon

தேசிய மக்கள் தொகை பதிவேடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி, அரசியல் நாடகமாடி சூழ்ச்சி செய்கிறார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களின் விவரம் வருமாறு:-

கேள்வி:- நல்லாட்சி வழங்குவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது குறித்து உங்களது கருத்து என்ன?

பதில்:- உண்மையிலேயே தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய அளவில் இந்த அறிவிப்பு இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றியாக நான் இதை கருதுகிறேன். அதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக அதிகாரிகள் அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி சிறப்பான முறையில் பணியாற்றிய காரணத்தால் இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்த ஆளுமைத்திறன் மிக்க மாநிலம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இதற்காக பாடுபட்ட அதிகாரிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சிபாரிசும் கிடையாது

கேள்வி:- இதுகுறித்து விமர்சனங்கள் கடுமையாக வந்துள்ளதே? தி.மு.க.வினர் விமர்சனம் செய்துள்ளனரே?

பதில்:- அனைத்து ஊடகங்களும், பத்திரிகைகளும் பாராட்டும் நிலையில் அரசை குறை கூற வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் இதை ஏற்க மறுக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை பொறுத்தமட்டில் எப்போதும் அ.தி.மு.க. அரசை குறை சொல்வது தான் வழக்கம். அதாவது, மத்திய அரசு, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 50 வகையான காரணிகளை கொண்டு ஆய்வு செய்தது. துறை வாரியாக மதிப்பெண் கொடுத்து, தரவரிசை பட்டியலில் 5.62 மதிப்பெண் கொடுத்து ஆளுமைத்திறன் மிக்க மாநிலம் என்ற அறிவிப்பை கொடுத்து, அதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதில் எந்த விதமான சிபாரிசும் கிடையாது. யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரிக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலம். பா.ஜனதா கட்சி ஆட்சி செய்யாமல் வேறு கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்திற்கும் கிடைத்துள்ளது.

கேள்வி:- பள்ளிக்கல்வித்துறை சார்பில் அடுத்த மாதம் (ஜனவரி) 16-ந் தேதி பள்ளிக்கு மாணவர்கள் வரவேண்டும் என்று தெரிவித்துள்ளனரே?

பதில்:- இதற்கு கல்வித்துறை விளக்கம் கொடுத்துவிட்டார்கள். தொலைக்காட்சி பெட்டி இல்லாதவர்கள், விருப்பப்பட்டால் பள்ளியில் வந்து பிரதமரின் உரையை பார்த்துக் கொள்ளலாம். இது கட்டாயமில்லை.

சுதந்திரமாக தேர்தல் நடக்கிறது

கேள்வி:- ஊரக தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடைகோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதே? இதுபற்றி உங்களது கருத்து?

பதில்:- நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும். இது தேர்தல் ஆணையத்தால் எடுக்க வேண்டிய முடிவு, மாநில அரசு அல்ல.

கேள்வி:- இது சம்பந்தமாக அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?

பதில்:- அ.தி.மு.க.வை பொறுத்தவரை, பொதுவாக சொல்ல வேண்டும் என்றால், தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் நடைமுறை வந்துவிடுகிறது. அதில் யாரும் தலையிட முடியாது என்பது தான் நீதி. மற்ற மாநிலங்களிலும் இதுபோல் நடைபெற்றுள்ளது. மற்ற மாநிலங்களிலும் ஊரகப்பகுதிகள் மற்றும் நகரப்பகுதிகள் ஆகியவற்றுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றுள்ளது. இவையெல்லாம் வரலாறு. ஆனால் உள்நோக்கத்தோடு ஒவ்வொருவரும் வழக்கு போடுகின்றார்கள். சுதந்திரமாக தேர்தல் நடக்கிறது. இதில் யாருடைய தலையீடும் இல்லை. யார் வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் தான் தீர்மானிக்கின்றார்கள். வாக்குகள் எண்ணப்பட்டு அறிவித்த பிறகு தான் வெற்றி பெற்றவர்கள் யார்? என்பதே தெரியும். இது மறைமுக தேர்தல். வாக்களித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஆளுங்கட்சி ஆத்துமீறல்

கேள்வி?- ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி அத்துமீறல் என்று சொல்கிறார்களே?

பதில்:- அத்துமீறல் என்று தி.மு.க.தான் சொல்லும். எந்த இடத்தில் என்ன தகராறு என்பது அந்தந்தபபகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். விவரம் தெரிந்த பிறகு தான் அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியும். இந்த தேர்தலை பொறுத்தவரை ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு மட்டுமே கட்சி ரீதியாக நடைபெறும்.

கேள்வி:- தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் தமிழ்நாட்டின் நிலை என்ன? கணக்கெடுப்பு எப்போது தொடங்குகிறது?.

தி.மு.க. அங்கம் வகித்தது

பதில்:- 1872-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. அதன்படி 1948-ம் ஆண்டு அதற்கென்று ஒரு தனிச்சட்டம் இயற்றியுள்ளார்கள். அதிலிருந்து 1951, 1961, 1971, 1981, 1991, 2001, 2011 என ஒவ்வொரு 10 ஆண்டுகள் வருகிற போதும் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகிறது. இந்த கணக்கெடுப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் மூலம் மக்களுடையை பொருளாதாரம் என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும். 1955-ம் ஆண்டும், அதன்பிறகு 2003-ம் ஆண்டும் திருத்தம் கொண்டு வந்தார்கள்.

2003-ம் ஆண்டு மத்தியில் பா.ஜனதா கட்சி தான் ஆட்சியில் இருந்தது. அப்போது தி.மு.க. அங்கம் வகித்தது. 2010-ம் ஆண்டு, 2003-ம் ஆண்டு கொண்டு வந்த திருத்த சட்டத்தின்படி, தேசிய மக்கள் தொகை பதிவேடு என்ற அடிப்படையில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம் செயல்படுத்தியது. அப்போதும் தி.மு.க. அங்கம் வகித்தது. அந்த காலக்கட்டத்தில் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு முறையை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தினார்கள்.

திட்டமிட்டு அரசுக்கு நெருக்கடி

திருத்தம் மற்றும் அமல்படுத்தும் போது தி.மு.க. தான் மத்திய அரசில் இடம் பெற்றிருந்தது. ஆனால் இப்போது அதை தி.மு.க. எதிர்க்கிறது. வேண்டும் என்றே திட்டமிட்டு அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். 2010-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது நடைமுறைப்படுத்தியதையே நாங்களும் நடைமுறைப்படுத்தியுள்ளோம் என்று மத்திய அரசும், உள்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளன.

தேசிய குடியுரிமை பதிவேடு கிடையாது. நாங்கள் கணக்கெடுக்கவில்லை. அவர்கள் தான் மக்களை குழப்புகின்றார்கள். மக்களிடத்தில் செல்வாக்கு இல்லாத கட்சிகள் ஒன்றாக சேர்ந்து வேண்டும் என்றே, மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை எதிர்க்கின்றார்கள் என்று நான் கருதுகிறேன். இதற்கு மேலும் போராட்டம் நடத்துவோம் என்று சொன்னால் என்ன செய்ய முடியும். மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி, அரசியல் நாடகமாடி சூழ்ச்சி செய்கிறார் என்பதை பொதுமக்களும், இளைஞர்களும், சிறுபான்மையின மக்களும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி:- தமிழகத்தில் கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்?

பதில்:- மக்கள் தொகை கணக்கெடுப்பை பொறுத்தவரை குடும்ப தலைவர் பெயர், சொந்த வீடு உள்ளதா? வீட்டிலுள்ள அறைகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, குளியலறை வசதி, சமையல் எரிபொருள், ரேடியோ, டி.வி., கணினி, தொலைபேசி, வாகன வசதி உள்பட 34 விவரங்கள் அதில் பதிவு செய்கிறார்கள். அதைத்தான் முதற்கட்டமாக எடுக்கின்றார்கள். என்.பி.ஆர். அடுத்த வருடம் தான் எடுக்கப்படுகிறது. என்.பி.ஆர்.ஐ. பொறுத்தவரை ஒரு குடும்பத்தை தனித்தனியாக பிரிக்கின்றார்கள். குடும்பத்திலிருந்து ஒட்டு மொத்தமாக எடுப்பது சென்‌‌ஷக்ஸ். அதை யாரும் வெளியிடமுடியாது. ஆனால் என்.பி.ஆர். வெளியிட முடியும். என்.பி.ஆரில் தான் ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இடம் பெற்றிருந்தாலும், தனித்தனியாக விவரங்களை எடுக்கின்றார்கள். அதிலே, குடும்ப தலைவர் பெயர், பெற்றோர் பெயர், திருமண விவரம், கணவர் பெயர், மனைவி பெயர், பாலியல் விவரம், பிறந்த தேதி, பிறந்த இடம், தற்காலிக முகவரி, நிரந்த முகவரி, தொழில், கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது.

தவறான பிரசாரம்

6 மாதம் குடியிருந்தாலும் போதும் என்கிறார்கள். அப்படி இல்லையென்றால் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் மத்திய அரசு தெளிவுப்படுத்துவது 6 மாதம் குடியிருந்தாலே எடுக்கலாம் என்றும், அல்லது 6 மாதம் தொடர்ந்து இங்கே வசித்தாலும், அதனையும் எடுக்கலாம் என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள். இதில், எந்தவித பிரச்னையும் கிடையாது. யாரும் பாதிக்கப்படுவது இல்லை.

இந்திய நாட்டில் வாழ்கின்ற இந்தியர்கள் எவரும் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள் என்று மத்திய அரசு தெளிவாக தெரிவித்திருக்கிறது. மு.க.ஸ்டாலினும், அவருடன் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கட்சிகளெல்லாம், வேண்டும் என்றே திட்டமிட்டு ஒரு தவறான பிரசாரத்தை தமிழகத்தில் பரப்பி வருகின்றனர்.

மருத்துவக்கல்லூரிகள்

கேள்வி:- கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை, இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்?

பதில்:- ஏற்கனவே மருத்துவ இடஒதுக்கீடு பற்றி தெளிவுப்படுத்தியுள்ளேன். தமிழ்நாட்டில் தான் மருத்துவ படிப்பிற்கான இடஒதுக்கீடு அதிகம். கடந்த ஆண்டு மட்டும் 350 மருத்துவ மாணவர்கள் புதிதாக படிப்பதற்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதற்கு மத்திய அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தாண்டு 9 அரசு மருத்துவக்கல்லூரிகளை தமிழகத்திற்கு ஒரே ஆண்டில் பெற்று, வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை ஏற்படுத்தி சாதனை படைத்துள்ளோம்.

மின் ஊழியர்கள்

கேள்வி:- மின் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8-ந் தேதி முதல் வேலைநிறுத்தம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்கள்?

பதில்:- ஏற்கனவே மின் ஊழியர்கள் வைத்த பெரும்பான்மையான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி இருக்கிறது. இதை மின் ஊழியர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது நம்முடைய தமிழ்நாடு மின்சார வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையும் அவர்களுக்கு நன்றாக தெரியும். அப்படி இருந்த காலக்கட்டத்திலும் கூட, அவர்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. இதனை அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். எனவே, போராட்ட அறிவிப்பை மின் ஊழியர்கள் கைவிட்டு அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மனுக்களை பெற்றார்

முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.


Next Story