குடியாத்தம் அருகே, 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு - போலீசார் விசாரணை


குடியாத்தம் அருகே, 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 Dec 2019 11:00 PM GMT (Updated: 29 Dec 2019 1:34 PM GMT)

குடியாத்தம் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குடியாத்தம், 

குடியாத்தம் அருகே கள்ளூர் முல்லைநகர் முதல் தெருவை சேர்ந்தவர் கயாஸ் (வயது 55), தேங்காய் வியாபாரி. நேற்றுமுன்தினம் கயாஸ் வியாபாரம் சம்பந்தமாக பெங்களூரு சென்றிருந்தார். வீட்டில் இருந்த குடும்பத்தினர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். இதனால் வீடு பூட்டியிருந்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் கயாஸ் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. வீட்டில் இருந்த 10 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.48 ஆயிரம், 2 கியாஸ் சிலிண்டர், தையல் எந்திரம், மகளின் திருமணத்திற்காக வாங்கி இருந்த பட்டுசேலைகள், புதிய துணிகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

 இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்–இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சங்கர், ஏட்டுகள் ஹரிதாஸ், கோவிந்தராஜ் உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அதேபகுதியை சேர்ந்த அயூப் (35) என்பவர் மசூதியில் இமாம் ஆக உள்ளார். இவர் நேற்றுமுன்தினம் குடும்பத்திருடன் வேலூர் சென்றுவிட்டு நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் பீரோவை திறந்து அதிலிருந்த ரூ.10 ஆயிரம், வெள்ளி பொருட்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இந்த 2 சம்பவங்கள் குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேலூரில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் திருட்டு சம்பவம் குறித்து கேள்விப்பட்டு சென்னைக்கு சென்றிருந்த கயாசின் மகள்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது ஊருக்கு செல்லும்போது 10 பவுன் நகைகளை பீரோவில் வைக்காமல் மறைவான இடத்தில் வைத்திருந்ததால், அந்த நகைகள் தப்பியது தெரியவந்தது.

தற்போது ஒரு கும்பல் பூட்டிய வீடுகளை கண்காணித்து இரவு நேரங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story