தஞ்சை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட வாலிபர் கதி என்ன? 2-வது நாளாக தேடும் பணி


தஞ்சை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட வாலிபர் கதி என்ன? 2-வது நாளாக தேடும் பணி
x
தினத்தந்தி 30 Dec 2019 4:15 AM IST (Updated: 30 Dec 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி நேற்று 2-வது நாளாக நடந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் புதுஆறு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே உள்ள படித்துறையில் நேற்று முன்தினம் ஒருவர் கை, கால்களை கழுவிக்கொண்டு இருந்தார். மற்றொரு வாலிபர் அருகில் இருந்த பாலத்தின் தடுப்புச்சுவரில் ஏறி நின்ற போது எதிர்பாராத விதமாக தவறி ஆற்றில் விழுந்தார்.

அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால் அவர் அடித்துச்செல்லப்பட்டார். அவர்கள் 2 பேரும் தஞ்சை செங்கமலநாச்சியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர்கள் என்றும் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டவர் சரவணன் (வயது21) என்பது தெரிய வந்தது.

2-வது நாளாக தேடும் பணி

ஆற்றில் வாலிபர் அடித்துச்செல்லப்பட்டதை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் இளஞ்செழியன் உத்தரவின் பேரில் நிலைய அலுவலர் திலகர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் ஆற்றில் கயிறு மற்றும் ரப்பர் மூலம் இறங்கி தேடினர். அதற்குள் இருள் சூழ்ந்து விட்டதால் மேற்கொண்டு தீயணைப்பு வீரர்களால் தேடமுடியவில்லை. இந்த நிலையில் தீயணைப்பு படை வீரர்கள் நேற்று 2-வது நாளாக ஆற்றில் மாயமான சரவணனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கதி என்ன?

அவர் தவறி விழுந்த எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள பாலத்தில் தொடங்கி தஞ்சை புறவழிச்சாலையில் உள்ள பாலம் வரை இடைவிடாது தேடினர். ஆனால் சரவணனின் கதி என்ன? என தெரியவில்லை. தொடர்ந்து அவரை தேடி வருகிறார்கள்.


Next Story