ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஒன்றியங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு 2,66,177 பேர் வாக்களிக்கவுள்ளனர்


ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஒன்றியங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு 2,66,177 பேர் வாக்களிக்கவுள்ளனர்
x
தினத்தந்தி 29 Dec 2019 11:00 PM GMT (Updated: 29 Dec 2019 7:08 PM GMT)

ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று (திங்கட்கிழமை) 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 2,66,177 பேர் வாக்களிக்க உவுள்ளனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் முதற்கட்டமாக அரியலூர், செந்துறை, திருமானூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 27-ந் தேதி நடந்த வாக்குப்பதிவில் 81.73 சதவீதம் வாக்குகள் பதிவானது. அதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் மீதமுள்ள ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 வரை நடக்கிறது. ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 1,32,851 ஆண் வாக்காளர்களும், 1,33,322 பெண் வாக்காளர்களும், 4 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,66,177 பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவிற்காக ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் 180 வாக்குச்சாவடிகள், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் 157 வாக்குச்சாவடிகள், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் 158 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 495 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவிற்காக அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வாக்கு பெட்டிகள், வாக்குச்சாவடியில் பயன்படுத்த தேவையான 72 வகையான பொருட்கள் உள்ளிட்டவை அடங்கிய பெட்டிகள் வேன், லாரிகள் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நேற்று மதியம் நடைபெற்றது.

201 பதற்றமான வாக்குச்சாவடிகள்

மேலும் ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 201 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளதாக போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவு கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றும் 63 பேர் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட உள்ளது. தேர்தல் பணியில் 4,071 அலுவலர்களும், பாதுகாப்பு பணியில் போலீசார், முன்னாள் ராணுவ வீரர்கள், ஊர் காவல் படையினர் என 1,500 பேரும் ஈடுபடவுள்ளனர்.

கலெக்டர் ரத்னா ஆய்வு

இந்நிலையில் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணகெதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தினையும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தினையும் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) பாலாஜி உடனிருந்தார்.

Next Story