தஞ்சை மாவட்டத்தில் 14 இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முடிவுகள் தாமதமாக அறிவிப்பு


தஞ்சை மாவட்டத்தில் 14 இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முடிவுகள் தாமதமாக அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Jan 2020 11:00 PM GMT (Updated: 2 Jan 2020 7:32 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் 14 இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஆனது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. முதல்கட்ட தேர்தலில் 75 சதவீத வாக்குகளும், 2-ம் கட்ட தேர்தலில் 76.57 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு அறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

வாக்கு எண்ணிக்கை தஞ்சை தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி சர்.சிவசாமி அய்யர்மேல்நிலைப்பள்ளி, ஒரத்தநாடு பெண்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊரணிபுரம் வெட்டுவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் அரசினர் மகளிர் தன்னாட்சி கல்லூரி, திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதீனம் மேல்நிலைப்பள்ளி, திருப்பனந்தாள் குமரகுருபர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பூண்டி பு‌‌ஷ்பம் கல்லூரி, பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுக்கூர் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியநாயகிபுரம் கலாம் பாலிடெக்னிக் கல்லூரி, பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 14 இடங்களில் நேற்று காலை தொடங்கியது.

வாக்குச்சீட்டுகள் பிரிக்கும் பணி

தஞ்சை ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டன. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைக்கு வைக்கப்பட்ட சீல்களை நேற்று காலை 8.45 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் அகற்றினர்.

பின்னர் அங்கிருந்த வாக்குப்பெட்டிகள் அருகில் இருந்த வாக்குச்சீட்டுகள் பிரிக்கும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு 45 மேஜைகள் போடப்பட்டிருந்தன. அந்த மேஜைகளில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு முகவர்கள் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு, வாக்குச்சீட்டுகள் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் கொட்டப்பட்டன. பின்னர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு பதிவான 4 வண்ணங்களில் ஆன வாக்குச்சீட்டுகளை தனித்தனியாக பிரிக்கும் பணியில் சத்துணவு அமைப்பாளர்கள் ஈடுபட்டனர்.

காலதாமதம்

4 வண்ணங்களான சீட்டுகளும் பிரிக்கப்பட்டு 50 சீட்டுகளாக கட்டப்பட்டு, தனித்தனியாக 4 வண்ணத்தில் ஆன வாளிகளில் சீட்டுக்கட்டுகள் போடப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்காக 3 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதற்காக 21 மேஜைகள் போடப்பட்டிருந்தன. ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவிகளுக்கு பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்காக தலா 5 அறைகள் ஒதுக்கப்பட்டு 35 மேஜைகள் போடப்பட்டிருந்தன. ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்கு 8 அறைகள் ஒதுக்கப்பட்டு 48 மேஜைகள் போடப்பட்டிருந்தன.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை 8.30 மணிக்கு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காலதாமதமாக காலை 10.30 மணிக்கு மேல் தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தாலும் முடிவுகளை அதிகாரிகள் தாமதமாக அறிவித்தனர். 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை பிற்பகல் 3 மணிக்கு மேல் தான் தொடங்கியது. இதனால் முடிவுகளை அறிந்து கொள்ள முடியாமல் கட்சி தொண்டர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அலுவலர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படாத காரணத்தால் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் அறிவிப்பதில் குழப்பம் ஏற்பட்டது.

செல்போன் எடுத்து செல்ல தடை

முடிவுகளை அறிவிக்க நீண்டநேரம் எடுத்து கொண்டதால் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சான்றிதழ் பெற காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்போன் எடுத்து செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்தது. அதேபோல் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர் யார்? அவர்கள் வாங்கிய வாக்குகள் என்ன? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக பத்திரிகையாளர்களுக்கு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை பார்த்து முடிவுகளை தெரிந்து கொள்ளுங்கள் எனவும், வாக்கு எண்ணிக்கையின் முழுமையான விவரம் இன்று (வெள்ளிக்கிழமை) மதியத்திற்கு மேல் தான் தெரியவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story