கடமான் கறி சமைத்த விவகாரம்: மேலும் 6 பேருக்கு 1¼ லட்சம் அபராதம்


கடமான் கறி சமைத்த விவகாரம்: மேலும் 6 பேருக்கு 1¼ லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 3 Jan 2020 10:15 PM GMT (Updated: 3 Jan 2020 8:35 PM GMT)

கடமான் கறி சமைத்த விவகாரத்தில் மேலும் 6 பேருக்கு ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

களக்காடு, 

நெல்லை மாவட்டம் களக்காடு வனச்சரகம் கொழுந்துமாமலை பீட் வனப்பகுதிக்கு அருகில் உள்ள பட்டங்காடு பகுதியில் கடமான் ஒன்றை செந்நாய்கள் கடித்து குதறின. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கடமானை பட்டங்காடு பகுதியைச் சேர்ந்த சங்கரமணி (வயது 29), ராமசாமி (46) ஆகியோர் தூக்கிச் சென்றனர். பின்னர் அதை கொன்று கறி சமைத்ததாக கூறப்படுகிறது. மேலும் மீதம் இருந்த கறியை அதே ஊரைச் சேர்ந்த சுடலைமணி (29), சுரே‌‌ஷ் (28), திருவிருத்தான்புளியைச் சேர்ந்த வள்ளிநாயகம் (41), கரிசல் பகுதியைச் சேர்ந்த ரசல் (49), மஞ்சுவிளையைச் சேர்ந்த உய்க்காட்டான் (25) ஆகியோருக்கு பகிர்ந்து கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் கயரவத் மோகன்தாஸ் உத்தரவின் பேரில் களக்காடு வனச்சரகர் புகழேந்தி மற்றும் வனத்துறையினர் சங்கரமணியை பிடித்து, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். மற்றவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்புடைய ராமசாமி, சுடலைமணி, சுரே‌‌ஷ், வள்ளிநாயகம், ரசல், உய்க்காட்டான் ஆகிய 6 பேரையும் வனத்துறையினர் பிடித்து, ரூ.1¼ லட்சம் அபராதம் விதித்தனர்.

Next Story